திங்கள், 16 பிப்ரவரி, 2015

                                                 அரசாட்சி எப்படி இருக்க வேண்டும்?



அரசன் கையில் செங்கோல் இருக்கும். அஃது அவன் அதிகாரத்தைக் குறிக்கும் அடையாளச் சின்னமன்று. நீதி தவறாத, நெறிபிறழாத நிர்வாகத்தைக் குறிக்கும் அடையாளச் சின்னமாகும். அரசன் தன் கையிலிருக்கும் செங்கோல் நேராக இருப்பதைப் போல், கோணலற்ற நேர்மை மிக்க அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அரசனுக்கு அக்கோல் நினைவூட்டுகிறது. எனவே அஃது ஒரு தார்மீகச் சின்னம். ஓர் அரசனை வாழ்த்த வந்த ஒளவை, வரப்புயர என்று வாழ்த்தினாராம். காரணம், வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் கோல் உயரும். கோல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயர்வான் என்பதாகும். ஒரு நாட்டின் அரசன் உயர வேண்டும் என்றால், அந்த உயர்வு எங்கிருந்து தொடங்குகிறது என்பதைக் குறிப்பால் காட்டி விட்டார் ஒளவையார். ஓர் அரசனின் வெற்றி என்பது, அவனது வாளின் வலிமையால் ஏற்படுவதில்லை. செங்கோலின் நேர்மையால் ஏற்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். அச்செங்கோலைப் பற்றிப் பாடுவதே செங்கோண்மை என்னும் இந்த அதிகாரம். இந்நாட்டில் செங்கோல் வழுவாத மன்னர்கள் பலர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இரவுக்காவலுக்கு மாறுவேடத்தில் சென்ற பாண்டிய மன்னன், ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். எச்சரிக்கை செய்வதற்காக காவலர்கள் கதவைத் தட்டுவது வழக்கம். ஆனால் காவல் காவல் என்று கூவிக் கொண்டே கதவைத் தட்டுவார்கள். மன்னன் அவ்வாறு கூவவில்லை. குரல் மாறுபாட்டைக் கண்டு பிடித்து விடுவார்களே என்ற எண்ணம். எனவே கதவை மட்டும் தட்டி விட்டு வந்து விட்டான். ஆனால், வீட்டுக்குரிய நபர்களுக்கு, கதவைத் தட்டியவன் திருடன்தான் என்ற எண்ணத்தை அவனது செயல் ஏற்படுத்தி விட்டது. மறுநாள் பாண்டியன் அவைக்கு அவர்கள் புகார் செய்ய வந்தார்கள். மன்னா! என்வீட்டுக் கதவை இரவில் ஒரு திருடன் வந்து தட்டினான். நல்ல வேளை நாங்கள் கதவைத் திறக்கவில்லை. நீங்கள் அந்தத் திருடனைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்றார்கள். என்ன தண்டனை தர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டான் மன்னன். தட்டிய கையை வெட்டிவிட வேண்டும் என்றார்கள் அவர்கள். மன்னன் தான் செய்த சிறு தவறுக்கு வருந்தினான். தன் கையை வெட்டிக் கொண்டான். பிறகு அவனுக்கு செயற்கைக் கரமாக பொற்கை பொருத்தப்பட்டது. எனவே அவன் பொற்கைப் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். கண்ணகியின் சிலம்புப் பரல் தெறித்து விழுந்ததும், தன் தவறை உணர்ந்தே ஒரு பாண்டிய மன்னன் அரியணையில் தன் உயிரை நீத்தான். இவை கதைகள் அல்ல, வரலாறுகள். மன்னன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் பெருமான்.
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை
மன்னன் தன் நாட்டில் குற்றம் குறை நேராமல் காப்பது முறை. குற்றங்களைத் தெளிவாக அறிந்ததும், வேண்டியவர், வேண்டாதவர் என்று பாரபட்சம் பார்க்காமல், சட்டமும், நீதியும் சொல்லும் தண்டனைகளைக் குற்றவாளிகளுக்கு அளிக்க வேண்டும். அப்படிச் செய்வதுதான் முறையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக