செவ்வாய், 27 மார்ச், 2012

போராட்டக்குழுவினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.


கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக உதயகுமார் தலைமையில் போராட்டம் நடந்து வந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் குழுக்கள் அமைத்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உடனடியாக பணிகளை தொடங்கலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ராதாபுரம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உதயகுமார் தலைமையில் சிலர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக உதயகுமார் கூறினார். இன்று தமிழக அரசும் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.

இதனையடுத்து ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரமேஸ்வரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சவார்த்தையில், நெல்லை கலெக்டர் செல்வராஜ், நெல்லை டி.ஐ.ஜி.,வரதராஜூ, எஸ்.பி., விஜயேந்திர பிதாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். போராட்டக்குழுவினர் சார்பில், மதுரை மாவட்ட ஆயர் பீட்டர் பெர்ணாண்டோ, அரிமாவளவன், ஜெயசீலன், சுந்தரி, சாரதி உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் ராதாபுரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்றும், வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர். கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு தொடரும் என்றும், ராதாபுரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும் வழக்குகள் வாபஸ் பெறுவது என்பது சட்டப்பூர்வமாக தான் நடைபெறும் என்றும், இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என கூறினார். பேச்சுவார்த்தை திருப்தியளித்தது என்றும், மாவட்ட நிர்வாகம் பரிவுடன் பேசியதாகவும் போராட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டக்குழு உறுப்பினர்கள், ‌காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள உதயகுமார் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். மதுரை மாவட்ட ஆயர் பீட்டர் பெர்ணாண்டோ ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் தங்களது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக