கூடங்குளத்தில் தொடங்கிவிட்டது தமிழக அரசின் நடவடிக்கைகள். இன்று காலை போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடி வந்த முக்கிய பிரமுகர்கள் 9 பேரை போலீஸார் திடீரென கைது செய்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக்குழு தலைவர் உதயகுமார் முதலில் கைது செய்யப்படுவார் என ஒரு ஊகம் இருந்தது. ஆனால், முதலில் கைதானவர்களில் அவர் கிடையாது. கைது செய்யப்பட்ட 9 பேரில் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். போராட்டக்காரர்கள் சார்பில் பிரதமரை சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தார். அதேபோல் முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்த குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.
போராட்டம் தொடர்பாக உதயகுமாருக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வக்கீல் சிவசுப்ரமணியனின் பங்கு அதிகம் என்கிறார்கள். அதனால்தான் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில், முதல் ரவுண்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அணுஉலை எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டக்குழு தலைவர் உதயகுமார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளார்.
இன்று காலையில் குவிக்கப்பட்டிருந்த போலீஸாரைவிட மேலும் அதிக எண்ணிக்கையில் 10 மாவட்டங்களில் இருந்து போலீஸார் கூடங்குளத்துக்கு தருவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்குள்ள போலீஸாரின் எண்ணிக்கை 4,000 அளவில் இருக்கலாம் .
போராட்டக்காரர்கள் எந்த நிமிடத்திலும் வன்முறையில் இறங்கலாம் என்பதால், போலீஸாரும் தயாராக உள்ளனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக