நாம் வெளியே செல்லும் போது விதவைப் பெண் எதிரே வந்தால் அபசகுனமா?
அந்தக் காலத்தில், இந்தியாவில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதை ஒட்டித்தான் இருந்தது. அதிலும், ஆண், வயதில் மூத்தவராக (குறைந்தபட்சம் ஏழு வயது வித்தியாசம் இருந்தது) இருந்ததால், கணவனை இழந்த பெண்கள் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் பூ, பொட்டு, வளையல், வண்ண உடைகள் எதுவுமே அணியக் கூடாது. வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டிய சமூகக் கட்டுப்பாடு. திருமணமான தம்பதிகளோ, அலங்காரம் செய்து கொண்ட திருமணமான பெண்ணோ வெளியே போகும்போது இவர்கள் எதிர்ப்பட்டால், இந்த இளம் விதவைகளின் மனம் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும். அது ஏதோவொரு வகையில், இப்படி சந்தோஷமாக வெளியே கிளம்பும் பெண்/தம்பதி பேரில் லேசான பொறாமையாகவும் பிரதிபலிக்கலாம். அந்த உணர்ச்சி இவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், அந்த விதவைப் பெண்மணிக்கு வேதனையைத் தரக் கூடாது என்று நினைத்து, கொண்டு வரப்பட்ட சம்பிரதாயம். ஆனால் வேதனையைத் தவிர்ப்பதற்காக வந்த சகுன சம்பிரதாயமே, அந்த விதவைகளுக்கு மேலும் வேதனையைத் தருகிறாற்போல் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமுமில்லை, அவசியமும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக