வியாழன், 25 டிசம்பர், 2014

ஐயப்பனின் வரலாறைத் தெரிந்து கொண்டவர்கள், முறைப்படி விரதமிருந்து, கெட்ட பழக்கங்களையெல்லாம் நிரந்தரமாக கைவிட உறுதியெடுத்து, சபரிமலைக்குச் சென்று வாருங்கள்.

                                          ஐயப்ப விரத முறை




கார்த்திகை முதல்நாள் நீராடி, பெற்றோரை வணங்க வேண்டும். குருசாமியின் கரத்தால் மாலை அணிய வேண்டும். குருசாமி மூலம் முடியாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து சுவாமியே சரணம் ஐயப்பா! உன் தரிசனம் தடையின்றி கிடைக்க வேண்டும். இந்த விரதம் எவ்வித பிரச்னையுமின்றி முடிவதற்கு அருள்தருவாய், எனச் சொல்லி அணிந்து கொள்ள வேண்டும். அன்றுமுதல் தினமும் குளிர்ந்த நீரில் காலையும் மாலையும் நீராடி, 108 முறை ஐயப்ப சரணம் கூறி, ஐயப்பன் படத்துக்கு பூஜை செய்ய வேண்டும். இரவில் தூங்கும் போது மெத்தை, தலையணை பயன்படுத்தக்கூடாது. மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம். பகலில் தூங்கக் கூடாது. பிரம்மச் சரியம் மேற்கொள்ள வேண்டும்.
அசைவ உணவு, போதைப் பொருட்கள் பழக்கம் இருந்தாலும், இனி என் வாழ்க்கையில் இதை இனி தொடவே மாட்டேன், என சங்கல்பம் (சத்தியம்) செய்ய வேண்டும். இதைச் செய்யாத பட்சத்தில் மாலையணிந்து சபரிமலை சென்றாலும், ஐயப்பன் இப்படிப்பட்டவர்களின் பிரார்த்தனையை ஏற்கவே மாட்டான். விரதகாலத்தில், பிறருடன் சண்டை சச்சரவு களிலும் ஈடுபடக்கூடாது. உரையாடும் போதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று கூற வேண்டும். இலையில் சாப்பிடுவதுடன், இயன்ற அளவு அன்னதானம் வழங்க வேண்டும். கன்னிசுவாமிகள் வீட்டில் கன்னி பூஜை நடத்தி, சக பக்தர்களையும், ஏழைகளையும் ஐயப்பனாகக் கருதி சித்ரான்னங்கள் (தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புளியோதரை போன்ற சிற்றுண்டிகள்) தானம் செய்ய வேண்டும். நெருங்கிய உறவினர் இறப்பு ஏற்பட்டால் மாலையைக் கழற்றிவிட வேண்டும். அதன்பின் விரதத்தை தொடரவோ, மலைக்குச் செல்லவோ கூடாது. பக்தர்கள் நடத்தும் ஐயப்பன் பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும். மாலையணிந்தவர்கள் வீடு, திருமண வீடுகளில் மட்டும் உணவு அருந்தலாம். பூப்புனித நீராட்டு விழா வீட்டிற்கு செல்லக்கூடாது. மலைக்குச் செல்லும் நாட்கள் தவிர பிற நாட்களில் கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தெருக்களில் விற்கும் பலகாரங்களையும் சாப்பிடக்கூடாது. சபரிமலைக்கு சென்று திரும்பிவிட்டாலும், மகர பூஜை (தை1) முடியும் வரை முந்தைய நாட்களைப் போலவே விரதம் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக