செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி கருணாநிதி மறைக்கும் இரண்டு பூசணி


கோபாலபுரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்கும் சமரச சமாதான படலம் நடத்தவே நேரம் சரியாக இருக்கும் கருணாநிதிக்கு... பற்றாக்குறைக்கு நில அபகரிப்பு கைதுகள்., குண்டர் கைதுகள், பொதுக்கூட்டங்கள் என கழக அரசியல் நடத்தவும் இடையில் நேரம் இருக்கிறது.
இதற்கும் இடையே,  கள்ளகவிதை எழுதவும் கருணாநிதிக்கும் நேரம் இருக்கிறது என்பதை அவ்வப்போது முரசொலி நிரூபித்துவருகிறது.
ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை முரசொலியில்... விரைவில் நாள் குறிக்கப்படும்என்ற வீராப்புத் தலைப்புடன் மு.க. ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
அந்த கவிதை இதுதான்...
‘‘கற்கண்டுத் தமிழ்க் கவிதைகள் கசக்குதென
அவற்றின் மீது கரிபூசி மறைக்கும்
கர்த்தப அறிவுடையோர்க்கு சம்மட்டி அடி
கொடுத்தது போல் வந்தது தீர்ப்பு!
தமிழர்களின் தொடர்ந்துவரும் தூய
வரலாற்றை
தடுத்து நிறுத்தலாம் என்ற
தீய எண்ணத்தோடு
பக்கங்களைக் கிழிக்கும் பாவிகளே!
பளார் பளார் என உங்கள்
கன்னங்களில் அறைவதுபோல்
வந்துள்ள நெருப்புத் தீர்ப்பை
பஞ்சுப் பொதிகளால் அணைக்கலாம்
என்று
பகற்கனவு காணாதீர்...’’ --
என்று
தொடரும் இந்த மு.க. கவிதை....
‘‘இன்று எமக்கு கிடைத்த வெற்றி....
மறைக்கப் பார்க்கும் திறமையினால்
அழிவதில்லை...
இளையை தலைமுறையினர் எக்காள
முழக்கமிடுமோம்
எல்லாரும் வாருங்கள் என்று அழைக்கின்ற
தன்மான அணிக்கு தவறாமல் வந்திடுவீர்...
விரைவில் நாள் குறிக்கப்படும்
விரிவுரையாற்றுவோர் பெயர்களும்
அறிவிக்கப்படும்....’’
என்று தன் எழுத்தால் எக்காள ஏலமிட்டிருக்கிறார் கருணாநிதி.
இந்த கவிதை வரிகளில் இரண்டு வரலாற்றுப் பொய்களை வசதியாக எழுதி முழு பூசணிக்காயை தன் மொழியில் மறைத்திருக்கிறார் கருணாநிதி.
மறைக்கப்பட்ட பூசணி 1 :
‘‘தீய எண்ணத்தோடு பக்கங்களைக்
கிழிக்கும் பாவிகளே...
பளார் பளார் என உங்கள்
கன்னங்களில் அறைவதுபோல
வந்த நெருப்புத் தீர்ப்பு.....’’
என்பது கருணாநிதி எழுதிய முதல் பொய்!
தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் உள்ள கருணாநிதி, கனிமொழி ஆகியோரின் சுயபுராணத்தைக் கண்டித்ததோடு அவற்றை நீக்குவதற்கும் புதிய் அரசுக்கு தடை இல்லை என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம். அதாவது இந்த விஷயத்தில் கருணாநிதியின் கன்னத்தில்தான் பளார் பளார் என அறைந்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், தீபக் மிஸ்ரா, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அளித்துள்ள அந்தத் தீர்ப்பில் கருணாநிதியின் இடைச் செருகல்கள் பற்றி குறிப்பிடும்போது...
‘‘சமச்சீர் கல்வி தொடர்பான பாடப் புத்தகங்களில் முந்தைய ஆளுங்கட்சித் தலைவர் (கருணாநிதி) பற்றிய தனிநபர் துதி இடம் பெற்றுள்ளது. தற்புகழ்ச்சி மற்றும் சுயவிளம்பரமும் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கின்றன.  முந்தைய ஆளுங்கட்சியின் கொள்கை, கோட்பாடுகளும் பாடப்புத்தகங்களில் திணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொடக்கப் பள்ளி கூட மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் இவை திணிக்கப்பட்டுள்ளதால்... குறிப்பிட்ட கட்சி பற்றிய பிரசாரமும் பிஞ்சு நெஞ்சங்களில் பதியவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் நற்கல்விக்கு எந்த வகையிலும தொடர்பில்லாதவற்றை நீக்கிவிடவேண்டும். இந்தத் திருத்தங்களை செய்வதற்கு புதிய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை...’’
என்று தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இப்போது சொல்லுங்கள்... இது கருணாநிதிக்கு விழுந்த பளார் அறையா? ஜெயலலிதாவுக்கு விழுந்த அறையா?
தன் மேல் விழும் ஒவ்வொரு அடிகளால் வலிக்கும்போது அழுகையை வெளிக்காட்டாமல் முக சேஷ்டைகள் பண்ணும் வடிவேலு கூட இந்த கவிதைக் காமெடிக் கருணாநிதியிடம் தோற்றார் போங்கள்!
தலைவரே உச்சநீதிமன்றம் உங்க கன்னத்துலயும் பழுக்க ரெண்டு பளார் கொடுத்திருக்காங்கஎன்று அவருக்கு அருகே இருக்கும் ஆற்காடுகளும், காட்பாடிகளும் கருணாநிதிக்கு புத்தி சொன்னால் நல்லது!
கருணாநிதி மறைத்த பூசணி 2 :
கருணாநிதி தனது கவிதையில் குறிப்பிடும் இரண்டாவது பொய்... சமச்சீர் கல்வி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்றும் அதற்காக எக்காள முழக்கமிட தமிழ்நாடு எங்கும் விரிவுரைப் பொதுக்கூட்டங்கள் நடத்த நாள் குறிக்கபப்டும் என்றும் சொல்லியிருப்பதே!
ஊரான் ஊட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிப் போனானாம்
என்ற கிராமத்துப் பழமொழிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தில்தான் சமச்சீர் கல்வியைப் பற்றி யோசித்த கருணாநிதி அதற்காக கம்யூனிஸ்டுகள் கொடுத்த அழுத்ததின் பேரில் முத்துக்குமரன் கமிட்டியை அறிவித்தார்.
அதன் பேரில் முத்துக்குமரன் கமிட்டி ஆராய்ந்து பொதுப் பாடத்திட்டம் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அம்சங்கள் கொண்ட சமச்சீர் கல்வி முறையை பரிந்துரை செய்தார்.
ஆனால் கருணாநிதி அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் பொதுப் பாடத் திட்டம் என்ற ஒற்றை அம்சத்தையும் மட்டும் முன்னிறுத்தி சமச்சீர் கல்வியை கொண்டுவந்தார். இதை முத்துக்குமரனே சில பத்திரிகைகளில் குறை கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி அதைப் பொருட்படுத்தாமல்... தனது சுய தம்பட்டங்களை பாடப் புத்தகங்களில் அச்சிட்டு முடித்துவிட்டார்.
எனவே இது சமச்சீர் கல்வி அல்ல... சமரசக் கல்வி என்று டாக்டர் ராமதாஸ் கூட குறிப்பிட்டார்.
இத்தகையை சமச்சீர் கல்வியைத்தான் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அ.தி.மு.க. அரசு அறிவித்ததும் கருணாநிதி வெறும் கண்டனம் மட்டும் தெரிவித்தார். இந்த குறைந்த பட்ச சமச்சீர் கல்வியையாவது தமிழகத்தில் அமல்படுத்திடவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அபிமானியான கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும், மேலும் சில பெற்றோர்களும் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடினார்கள்.
அவர்கள் டெல்லி சென்று தங்கியது, வக்கீல் வைத்தது, சட்ட பாயின்டுகளை எடுத்துக் கொடுத்தது என எதிலாவது தி.மு.க. உதவி செய்ததுண்டா?
கனிமொழிக்காக ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கும் ராம்ஜெத்மலானியை புக் செய்த தி.மு.க.... சமச்சீர் கல்விக்காக ஒரு வண்டுமுருகன் வக்கீலையாவது அனுப்பியதா? கப்பல் முதலாளிகளையும், மத்திய அமைச்சர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள தி.மு.க. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல்களுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்திருக்குமா?
கொரடாச்சேரியில் ஆர்பாட்டம் நடத்தி ஒரு மாணவனின் உயிரை அநியாயமாக பலிகொடுத்ததுதான் தி.மு.க. சமச்சீர் கல்விக்கான சட்டப்போராட்டத்தில் செய்த ஒரே தொண்டு!
உண்மைகள் இப்படி இருக்கையில்... பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றியை தனது வெற்றியாக உருமாற்றி திசைமாற்றி திரித்துக் கொள்ள முற்படுகிறார் கருணாநிதி?
சமச்சீர் கல்வி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் பளார் வாங்கியும்... ஏதோ தாங்கள்தான் போராட்டம் நடத்தி வெற்றிகண்டோம் என எக்காள முழக்கமிட தி.மு.க.வுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இதை இந்த விஷயத்தில் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் கூட்டம் போட்டு பேசவேண்டும். கருணாநிதி பேசக் கூடாது!


நன்றி ;  தமிழ்லீடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக