புதுடில்லி, இந்தியா: ராஜினாமா கடிதத்தைத் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்த கணம்வரை, தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள தயாநிதி மாறன் போராடியதாக தகவல் கிடைத்திருக்கின்றது. பதவிக்காக அவர், வாய்விட்டுக் கெஞ்சும் நிலைவரை சென்றார் என்கின்றன டில்லி வட்டாரங்கள்.
“என்னைப் பதவியிலிருந்து தூக்க விரும்பினால், நானே வெளியேறிவிடுகிறேன். அதற்கு 30 நாட்கள் அவகாசம் தாருங்கள், பிளீஸ்” என்று தயாநிதி மீண்டும் மீண்டும் கேட்டதாகத் தெரிகின்றது.
ஆனால், அவருடைய கெஞ்சல் பலனளிக்காத நிலையில், நேற்று (வியாழக் கிழமை) தனது அமைச்சர் பதவியை இரண்டாவது முறையும் ‘அற்பாயுசில்’ முடித்துக்கொண்டார் தயாநிதி.
கடந்தமுறை அவர் அமைச்சராக இருந்தபோதும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவியில் இல்லாமல் வெளியேற வேண்டிய துரதிர்ஷ்டசாலியாகவே அவர் இருந்தார்.
“தயாநிதி, 30 நாட்கள் அவகாசம் கேட்டது எதற்காக?” என்ற கேள்வி டில்லி அரசியல் வட்டாரங்களில் சுற்றிவருகின்றது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சி.பி.ஐ. விசாரணைக்குள் தயாநிதி சிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அது அவருக்கும் தெரியும். அந்த வழக்கிலிருந்து தப்புவதற்கு உடனடியாக அவருக்கு சிவசங்கரனின் தயவு தேவை.
30 நாட்கள் அவகாசத்தில், மத்திய அமைச்சர் பதவியை வைத்து சிவசங்கரனுடன் ஏதாவது டீல் வைக்க தயாநிதி முயற்சிக்க விரும்பினாரா? இந்தக் கேள்வி டில்லியில் பலருக்கு இருக்கிறது!
இந்த 30 நாள் அவகாசத்தைப் பெற தயாநிதி சளைக்காமல் முயற்சித்தார் என்கிறார்கள். பிரதமரிடம் கேட்டுப் பலனில்லாத நிலையில், சோனியாவுடன் பேச முயற்சித்திருக்கிறார். அவரும் இவரைச் சந்திப்பதைத் தட்டிக் கழித்துவிடவே, அகமது படேலிடமும் தனது 30 நாள் அவகாசக் கோரிக்கையை வைத்தார் எனத் தெரிகின்றது.
அகமது படேல்தான், அமைச்சரவை விவகாரங்களில் சோனியாவின் பிரதான ஆலோசகர் என்பது டில்லி அரசியல் வட்டாரங்களில் அனைவருக்கும் தெரியும். அவரும் தயாநிதியின் கோரிக்கையை சோனியா வரை கொண்டுசெல்லத் தயாராக இருக்கவில்லை!
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன், நேற்று மதியம் கடைசி முறையாக பிரதமரைச் சத்திக்கச் சென்றார். அதுதான் தனது Breaking point என்பது அவருக்குத் தெரியும். அதனால், அரசு வண்டியைத் தவிர்த்துவிட்டு, தனது சொந்த BMW வண்டியில் பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு சென்றார்.
இவருக்கு வெறும் 5 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தது. தயாநிதியின் கெஞ்சலை மீண்டும் கேட்க விரும்பாத பிரதமர்-
கையை நீட்டினார்! (தயாநிதியின் பாக்கெட்டிலிருந்த கடிதத்துக்காக)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக