ஞாயிறு, 7 ஜூன், 2015

                      ...........................அதென்ன பத்து பொருத்தம்?....................








திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.
அதென்ன பத்து பொருத்தம்?
ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.
நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா?
1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.
5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.
8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.
9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.
10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.
இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.
பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.
                                 முழுமுதற்கடவுள் சிவனே


சிவனைத் தவிர,இவ்வுலகில் எவரும் இல்லை............!!இந்தியா முழுவதும்........... அகிலத்தின் சில இடங்களிலும்.......... சிவலிங்கங்கள் மண்ணில் புதையலாக எடுக்கப் பட்டுள்ளன..............!!
உலகில் வேறு எந்த உருவங்களும்,இந்த அளவில்எடுக்கப் படவில்லை.................!!
எந்த கடவுள் உருவங்களும்.....இந்த அளவில் எடுக்கப் படவில்லை.................!!
திருப்பதி மலைக் காடுகளில் கூட’ சிவலிங்க காய்கள்[ருத்ராட்சம்]..... பூக்கள்[ நாகலிங்க மரம்]ஏராளம்...!!
வேறு எந்த கடவுளுக்கும்இந்த மாதிரி இயற்கை உருவ அமைப்பு கிடையாது...............!!
முழுமுதற்கடவுள் சிவனே
                              ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்



ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுக்கு அர்த்தம்
நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முயல்பவரே வைத்தியர். அவரை கொலைகாரராகச் சித்திரிக்கிறதே இது! இதன் திருத்தமான வடிவம் எது?
“ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்பதே சரி.
மூலிகை, மரப்பட்டை, இலை, வேர் முதலியவற்றைச் சித்த மருத்துவர் மருந்தாகப் பயன்படுத்துகிறார். வேரைக் கொன்றவர் என்பது வேரைப் பிடுங்கிப் பயன்படுத்தியவர் என்று பொருள்படும். ஆயிரம் வேரைப் பயன்படுத்தினாலும் அரை வைத்தியர்தான். முழுமையடைவதற்கு மேன்மேலும் புதுப்புது வேர்களைப் பயன்படுத்தவேண்டுமென்று, மருத்துவத்தில் முன்னேற ஊக்குவிக்கிற பழமொழி இது.
வேரைக் கொல்லுதல் என்பது பொருந்துமா என்றால் பொருந்தும். "இளைதாக முள்மரம் கொல்க" என்ற குறளில் 'மரம் கொல்லுதல்' என்ற தொடரைக் காணலாம்
                             கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா?


மாமிசம் சாப்பிடுபவர்கள் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள். எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்கொண்டு சாப்பிட்டே தீர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும். இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள். லெக்பீசை வாயில் வைக்கும்போது, இதையும் கொஞ்சம் மனசுலே வச்சுக்கிடுங்க! இந்த விளக்கத்தைச் சொன்னது யார் தெரியுமா? வாரியார் ...!
                        கோயிலில் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வதுதான் சரி




நமக்கு எது வேண்டுமோ அதை கடவுள் நன்கு அறிவார். நாம் கேட்காமலேயே அவர் கொடுத்தருள்வார் என்ற பூரண நம்பிக்கையுடன் வழிபாடு செய்யும்போது சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்தால் போதும் . இதைத்தான் பெரியவர்களும் சுவாமிபெயருக்கு அர்ச்சனை என்ற வழக்கத்தை ஏற்படுத்திவைத்தனர். இந்த அர்ச்சனை மிகவும் உயர்பக்தியில் செய்யப்படுவதாகும்.
                                வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் என்ன நன்மை



மிகப் பழங்காலத்தில் இருந்தே விளக்கேற்றுவது என்பது வழிபாட்டின் முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது. வீட்டில் மகாலட்சுமி என்றும் நிலைத்திருக்க விளக்கு ஏற்றுதல் மிகவும் அவசியம். அதாவது, பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) விளக்கு ஏற்ற வேண்டும்.இரவு, பகல் மாற்றம் ஏற்படும்போது சுற்றுப்புற சூழலில் நிகழும் சில மாற்றங்களால் விஷ பாதிப்பு உண்டாகும். விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் இந்த பாதிப்பை தடுக்கவல்லது. இதை முன்னிட்டே அதிகாலையிலும், மாலையிலும் விளக்கு ஏற்றச் சொன்னார்கள் நம் முன்னோர்கள். தினசரி இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கில் ஐந்துமுக தீபம் ஏற்றி, மகாலட்சுமி பூஜை செய்வது மிகவும் சிறந்தது. சில பரிகாரங்களுக்காக மண்ணாலான அகல விளக்கில் நெய் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது. தீபம் ஏற்ற பஞ்சு திரியே மிகவும் சிறந்தது. நல்லெண்ணெய், நெய் இவற்றைப் பயன்படுத்தி விளக்கேற்ற மங்கலம் நிலைக்கும்.
                                                           திருவிளக்கு வழிபாடு



இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமானதான இடத்தைப் பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது. விளக்கு வழிபாடு சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகிறது. வீட்டின் வாசலை மெழுகி மாக்கோலம் இட்டு அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின் அதனை வீட்டு பூஜையறையில் வைத்தால் அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கை ஏற்றி வழிபடாதவர்கள் அவ்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாக்கவாவது செய்யலாம்.
விளக்குபூஜை எப்போது ?
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன
சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
வைகாசி - செல்வம் செழிக்கும்.
ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
ஆடி - ஆயுள்பலம் கூடும்.
ஆவணி - புத்தித்தடை நீங்கும்
புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
ஐப்பசி - நோய்கள் உண்டாகும்
கார்த்திகை - நற்பேறு கிட்டும்
மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மாசி - துன்பங்கள் நீங்கும்.
பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
விளக்கு பூஜையின்போது கவனிக்கவேண்டியவை
* விளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். பூஜைக்கு உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. திரி ஏற்றியபின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு பூமாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்டலாம். சுடரில் இருந்து பத்தி, சூடத்தை கண்டிப்பாக கொளுத்தக் கூடாது.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு பக்கம் பார்த்து வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்குகளை தீக்குச்சியால் நேராக பற்ற வைக்காமல் துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
ராஜயோகம் தரும் வழிபாடு
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால் அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி மன்னனாக பிறந்தது. வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சமும் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்டதற்கே ஒரு எலிக்கு ராஜயோகம் கிடைத்தது என்றால் நாம் இறைவனை எண்ணி ஏற்றும் விளக்கிற்கு என்ன பலன் கிடைக்கும்.
ஐந்து முக விளக்குகள் ஏன் ?
நாம் வாழும் உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலும் ஐம்பொறிகளால்தான் இயங்குகிறது. பெண்கள் வைத்திருக்க வேண்டிய நற்குணங்களும் ஐந்து. இவ்வாறு, ஐந்து என்ற எண் நம் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் விதமாகத்தான் குத்து விளக்கை ஐந்து திரியுடன் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டது.
திருவிளக்கு பூஜைக்கு பயன்படும் குத்துவிளக்கின் மீது எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது நியதி. இதற்கு காரணம் இருக்கிறது. உச்சியில் ஒன்று, அதற்கு கீழ் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுகள், அதனையடுத்து கைகளாக கருதி இரண்டு மற்றும் திருவடியில் ஒன்று என பொட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குபூஜை பரிபூரணமானதாய் இருக்கும் என்பதாக ஐதீகம்.
முதலில் பூஜை செய்யும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்வதற்கு முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியை (அட்சதை) பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களாக அலங்கரிக்க வேண்டும். பின்பு துணை விளக்கினால் திரியை ஏற்ற வேண்டும். எச்செயலைச் செய்யும் முன்பும் விநாயகரை வழிபடவேண்டும் என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அவரையும் அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமரவேண்டும். பின் ஓம் ஒளிர்வளர் விளக்கே போற்றி என்று சொல்லிக்கொண்டே திரியை ஏற்ற வேண்டும். பின் தொடர்ந்து அம்பாள் துதிப்பாடல்களை பாடியபடி பூஜையை துவங்கிவிடலாம்.
திரிகளும், பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.
விளக்கு பூஜைக்கான விதிகள்
* திருவிளக்கு பூஜைக்கு எவர்சில்வர் விளக்குகள் உகந்தது அல்ல என்பதால் பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* பூஜையின்போது, தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைக்க வேண்டும். இதனால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்பதாக ஐதீகம்.
* விளக்கின்மீது எட்டு இடங்களில் சந்தனம், குங்குமப்பொட்டு வைக்க வேண்டும்.
* ஒரு திரி கொளுத்துவதனால் கிழக்கு முகமாக மட்டுமே கொளுத்த வேண்டும்.
* கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம்.
விளக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள்
விளக்கு பூஜைக்கு தயாராகும் முன்பு கீழ்கண்ட பொருட்களை முன்னதாகவே தயாராக வைத்துக்கொள்ளுங்கள். திருவிளக்கு, தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, நைவேத்திய பொருட்கள், துணை விளக்கு, தீர்த்த பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு.
கணபதி பாடல்
விளக்கு துதிப்பாடல் பாடுவதற்கு முன்பு மஞ்சளால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரை கீழ்க்கண்ட பாடலைப்பாடி பூஜை செய்ய வேண்டும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துப் போற்றுகின்றேனே.
எண்ணெயும் பலன்களும்
குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. சுடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும்.
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
திருவிளக்கில் எத்தனை பொட்டு வைப்பது?
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
விளக்கேற்றும் பலன்கள்
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்
யாருக்கு என்ன எண்ணெய்
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
விளக்கேற்றும் திசைகள்
கிழக்கு - துன்பங்கள் நீங்கி குடும்பம் விருத்தி பெறும்
மேற்கு - கடன், தோஷங்கள் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
                                                      ஈசன் என்பதன் பொருள்











ஈசன் என்ற சொல்லுக்கு அரசன், ஆள்பவன்,இறைவன், மூத்தவன், கடவுள், குரு, தலைவன் என பல பொருள்கள் உண்டு. உலகைக் கட்டிக் காக்கின்ற சிவனே உலகின் தலைவனாக இருப்பதால் ஈசன் என குறிப்பிடப்படுகிறார். அவருடைய இடப்பாகத்தில் இடம் பெற்றிருக்கும் தேவிக்கு ஈஸ்வரி, ஈசானி, ஈசி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. சிவனுக்குரியநட்சத்திரமான திருவாதிரையை ஈசன் நாள் என்பர். அவர் விரும்பி அணியும் கொன்றை மாலைக்கு ஈசன் தார் என்று பெயர். சிவன் உறைந்திருக்கும் கைலாய மலை ஈசான மேரு எனப்படும். தன்னை நம்பி வந்தவருக்கு, அள்ளித் தரும் ஈர நெஞ்சமும், ஈகை குணமும்கொண்டவர் என்பதால், இவரை ஈசன் என்பர். 
                                                              சுதர்சன சக்கரம்..!



கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் `சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.
சாதாரணமாக `சுதர்சன சக்கரம்' கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால். விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.
எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மறுபடியும் அதன் இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.
ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை `ரன்ஸகதி' என்பர். சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. அதனுடைய வடிவம் எத்தகையது என்றால்.சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.
                                   கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?



தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.
எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.
சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.
கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.
குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.
காலத்தால் அழியாத கண்ணதாசனின் வரிகள் இன்றும் என்றும் அப்படியே பொருந்த கூடியது மனித வாழ்க்கைக்கு



1) ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி..
2) இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
இதில் சொல்லுக்கு செய்கை பொன்னாகும் , வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்..
3 ) உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்..
4) நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்..
இங்கே உண்மை என்பது அன்பு, பணிவு என்பது பண்பு...
5 ) ஆசை , கோபம் , களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்,
6 ) அன்பு, நன்றி கருணை கொண்டவனம் மனித வடிவில் தெய்வம்...
இதில் மிருகம் என்பது கள்ள மனம், தெய்வம் என்பது பிள்ளை மனம்.
                                                                நமக்கு மேலே ஒருவனடா..



" இன்று பல நாடுகள்
செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.
அவற்றில் செல்போன்
பயன்பாடு, ராணுவ
பயன்பாடு,
உளவு என
பல்வேறு காரங்களுக்காக
பயன்படுத்தப்படுகிறது.
சில
வருடங்களுக்கு முன்பு அமெரிக்க
செயற்கைகோள்
ஒன்று பூமியின்
குறிப்பிட்ட
பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3
வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது.
3 வினாடிகளுக்கு பிறகு
வழக்கம்போல்
வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.
எந்தவித பழுதும் அதன்
செயற்கைகோளில்,
அதன்
கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த
சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த
ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்???
- என்பதை ஆராய்ந்து,
கிடைத்த
முடிவு நாசாவை மட்டுமல்ல,
உலகையே மிரள
வைத்தது.
ஆம்! எந்த
ஒரு செயற்கைகோளும்
பூமியில் இந்தியாவின்-
தமிழ்நாடு
அருகில் உள்ள
புதுச்சேரி-
திருநள்ளாறு ஸ்ரீ
தர்ப்பநேஷவரர்
கோவிலுக்கு மேல் நேர்
உள்ள
வான்பகுதியை கடக்கும்
3 வினாடிகள் மட்டும்
ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன
காரணம் ???
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வினாடியும்
கண்ணுக்கு தெரியாத
கருநீலகதிர்கள் அந்த
கோவிலின்
மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்
சனி பெயர்ச்சியின்
பொது இந்த கருநீலகதிர்களின்
அடர்த்தி மிகவும்
அதிகமாக இருக்கும்.
விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும்
செயற்கைகோள்கள் இந்த
கருநீலகதிர்கள் பாயும்
பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.
அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும்
ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம்
என்னவென்றால் இந்த
கோவில்தான்
இந்துக்களால்
'சனிபகவான்'
தலம் என்று போற்றபடுகிறது.
இந்த
சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல
முறை
திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.
மனிதனை மீறிய
சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.
அவர்களும்
சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.
இன்று வரை விண்ணில்
செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும்
பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த
செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள்
நம்முடைய
முன்னோர்களை நினைத்து கட்டயம்
பிரமிக்கவேண்டும்.
நாம் பல
செயற்கைகோள்கள்
கொண்டு கண்டறியும்
சனிகோளின்
கதிர்வீச்சு விழும்
பகுதியை கண்டு பிடித்து அதற்கென
ஒரு கோயிலையும்
கட்டி , கதிர்வீசுகள்
அதிகள் விழும்
நாட்களையும்
கணக்கிட்டு அதற்க்கான
நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும்
திறமையை,நம்மால்
நினைத்துக்கூட பார்க்க
முடியாத
ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட
நம்
முன்னோர்களை நினைத்து என்னால்
பிரமிக்காமல் இருக்க
முடியவில்லை.
இதை விஞ்சும்
வகையில் ஒரு விசயம்
கேள்வி பட்டேன்.
நீங்கள் எதாவது சிவன்
கோவிலுக்கு சென்றால்
அங்கே
நவகிரகங்களை நன்றாக
கவனியுங்கள். அந்த
சிலைகளின்மேல்
கட்டப்பட்டுள்ள
துணிகளையும் நன்றாய்
உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல்
அறிவையும் கொஞ்சம்
தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த
நிறத்தில் இருக்கும்
என்பதை நம்
முன்னோர்கள்
கட்டிவைத்திருக்கும்
அந்த துணிகளில்
கண்டறியுங்கள்,
பிரமித்து போவீர்கள்
பெரியோர்களின்
அறிவாற்றலை நினைத்து,
இந்தஅறிவியலின்
அதிசயத்தை அனைத்து தலைமுறையும்
அறியவேண்டும்,
அதற்காக
அவர்கள் நம்மை பின்பற்ற
வைத்ததுதான் கடவுள்
மார்க்கம் என்றே நான்
எண்ணுகிறேன்...
எது எப்படியோ???
நமது முன்னோர்கள்
நம்மை விட
கில்லாடிகள் !!!!
எப்படியா ??
அவர்கள் போட்ட
புதிருக்கு இன்னும்
விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்..
அறிவியல்
வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவனடா....
ॐ..........சிவமயம்..........ॐ
                                                          சிவலிங்க தத்துவம்:



கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத்தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது. பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற் குள்ளேயே ஒடுங்குகின்றன.சிருஷ்டி தொடங்கும் போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் உருவம் உணர்த்துகிறது. லிங்க உருவில் பாகமாக ஆதாரமும் விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.
இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது ருத்ரம்.
                                     திருவிளையாடல்
                           திருநகரங்கண்ட படலம்!
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் அழகனான சொக்கநாதனே! ஒரு காலத்தில், பாண்டியநாடு கடம்பவனங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த வனத்துக்குள் ஏராளமான அருவிகள் இருந்தன. வனவிலங்குகள் வாழ்ந்த கொடிய காடு அது. இந்திரன் நிர்மாணித்து சென்ற சொக்கநாதர் திருச்சன்னதியை அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தாங்க, அந்தச் சன்னதி மட்டுமே காட்டுக்குள் இருந்தது. தனஞ்செயன் என்ற வணிகர் பாண்டியநாட்டில் வசித்து வந்தார். அவர் மாபெரும் சிவபக்தர். சிவனடியார்களை உபசரிப்பதில் ஆனந்தம் கொண்டார். வணிகம் செய்தததால், பெரும் செல்வந்தராகவும் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் வெளியூரில் வியாபாரத்தை முடித்து விட்டு, கடம்பவனத்துக்குள் புகுந்து வீடு நோக்கி நடந்தார். திடீரென வானம் இருண்டது. காட்டுக்குள் பாதை தெரியாத அளவு ஒளி சூழ்ந்தது. தனஞ்செயன் அசைவற்று நின்று விட்டார். என்ன செய்வதென தெரியவில்லை. அப்போது, மின்னல் வெட்டினாற்போல் ஓரிடத்தில் ஒளி தோன்றியது. தனஞ்செயன் ஒளி வந்த திசை நோக்கி நடந்தார். அங்கே, சொக்கநாதப் பெருமானின் விமானம் பளிச் சிட்டது.
உள்ளே பெருமான் ஜொலித்துக் கொண்டிருந்தார். இந்தக் கோயில் இங்கே எப்படி வந்தது? யார் கட்டியது? என்று தனஞ்செயனுக்கு குழப்பம். இந்திரனால் உருவான கோயில் அது என்பதை அவரால் எப்படி உணரமுடியும்? அருகில் இருந்த குளத்தில் பொற்றாமரைகள் பூத்துக் கிடந்தன? தங்கத்தில் தாமரையா? அவை தான் ஒளிக்கீற்றைச் சிந்தி இங்கே வெளிச்சமாக இருக்கிறதா? அவர், சொக்கலிங்கத்தைப் பக்தியோடு வணங்கினார். திடீரென வாத்தியங்கள் முழங்கும் ஒலி கேட்டது. தனஞ்செயன் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் சப்தம் வந்த திசை நோக்கி திரும்பினார். ஏராளமானோர் பட்டாடைகள் பளபளக்க, தலையில் கிரீடங்களுடன், பூஜை பொருட்களை தங்கத் தாம்பாளத்தில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தனர். சொக்கலிங்கப் பெருமானுக்கு அவர்கள் பூஜை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தான் தனஞ்செயனுக்கு அவர்கள் தேவர்கள் என்பது புரிந்தது. வானத்து தேவர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்ததே! அதிலும், அவர்கள் சிவபூஜை செய்வதைக் காண என்ன பாக்கியம் செய்தேனோ! அவரது உடல் சிலிர்த்தது. சில தேவர்கள் பொற்றாமரைக் குளத்தில் இறங்கிப் பூப்பறித்தனர். தனஞ்செயனும் தன்னையறியாமல் குளத்துக்குள் இறங்கி, அவர்களுக்கு பூப்பறித்துக் கொடுத்து உதவினார். அவர்கள் அவரை வாழ்த்தினர். பூஜை முடிந்ததும் தேவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர். இந்த அதிசயம் குறித்து, நாடாண்ட மன்னர் குலசேகரப் பாண்டியனிடம் தெரிவித்தார் தனஞ்செயன்.
மன்னா! தாங்களும் அத்தகைய பூஜையைக் காண வேண்டும். நான் அந்த பூஜையை சோமவாரத்தன்று (திங்கள்கிழமை) கண்டேன். தாங்களும் அடுத்த சோம வாரத்தன்று அதைக் காண வரவேண்டும், என்று கேட்டுக் கொண்டார். மன்னனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவனுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. அடுத்த சோமவாரம் எப்போது வருமென காத்து கொண்டிருந்தான். முதல்நாள் இரவு, பரபரப்புடன் இருந்த அவன், தூக்கம் பிடிக்காமல் இருந்தான். அதிகாலையில் தூக்கம் வந்துவிட்டது. அப்போது எழுந்த கனவில், சொக்கநாதர் அவன் முன்னிலையில் தோன்றி, குலசேகரா! தனஞ்செயன் கண்டது உண்மையே. நீ கடம்பவனத்தை சீர்திருத்தி ஒரு நகரமாக மாற்று. என் கோயிலை அடையாளமாகக் கொண்டு, அது நடுவில் இருக்க நகரம் சிறப்புற அமைய வேண்டும். வீதிகள், வீடுகள், மாளிகைகள் அமைய வேண்டும், என்று கட்டளையிட்டார், திடுக்கிட்டு எழுந்த மன்னன், உடனடியாக அமைச்சர்கள், படைகள் புடைசூழ, தனஞ்செயன் வழிகாட்ட காட்டுக்குள் சென்றனர். அங்கே எட்டு யானைகள் விமானத்தை தாங்க, அதன் கீழ் சொக்கநாதர் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அனைவரும் சொக்கநாதரைச் சேவித்தனர். உடனடியாக விக்னேஸ்வர பூஜை நடந்தது. நகரம் கட்டும் பணியைத் துவங்கினான் மன்னன். அர்த்தமண்டபம், உற்சவ மண்டபம், வேள்வி மண்டபம், மடப்பள்ளி முதலானவை அமைத்தான். பின்னர் கோயிலைச் சுற்றி மாடமாளிகைகள், பெரிய வீடுகள், வீதிகள் ஆகியன அமைக்கப் பட்டன. பார்க்க மிக அருமையாக இருந்தது அந்த நகரம். உடனடியாக, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து சிறப்பாக முடித்தான். சிவபெருமான் அங்கே எழுந்தருளினார். தனது ஜடாமுடியில் அணிந்திருந்த சந்திரனின் கலைகளில் (பிறை) ஒன்றை நகரத்தில் சிந்தினார். எனவே அது ஒளி பெற்றது. சந்திரனே மனதிற்கு அதிபதி. மனதிடத்தை வழங்குபவர். அதனால், நகரில் வசித்த மக்கள் மனோதிடம் பெற்றனர். சந்திரனை பார்த்தால் மனம் இனிக்கும். இனிப்பை மதுரம் என்றும் சொல்வர். மதுரம் சிந்திய அந் நகரத்துக்கு மதுரை என்று பெயர் சூட்டினான் குலசேகரப் பாண்டியன். பின்னர் பலகாலம் அந்நாட்டில் செங்கோல் ஆட்சி நடத்தினான்.
                                            தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியாசம்



உயர்ந்தவர்களுக்குக் கொடுப்பது தானம். எளியவர்களுக்கு கொடுப்பது தர்மம். பொதுவாக உதவி புரியும் எண்ணத்துடன் செய்யும் எந்த செயலுக்கும் இரவு, பகல் கிடையாது. அதற்குரிய புண்ணியம் கொடுத்தவருக்கு உடனே கிடைத்து விடும். ஆனால், மனதில் எண்ணியிருக்கும் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் தானத்தை பகலில் தான் செய்ய
வேண்டும். ஏனென்றால், அதற்கு சூரியதேவன்சாட்சியாக இருப்பார் என்பது ஐதீகம். சந்திர கிரகணம், திருமணச் சடங்கு, மாதப்பிறப்பு, வெளியூர் கிளம்பும் நேரம், ஆபத்து காலம்,குழந்தை பிறப்பு, ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு போன்றவற்றின் போது இரவு நேரத்திலும் தானம் செய் யலாம்.
                                                                ராம கீதை



போர்க்களத்தில் தம்பி கும்பகர்ணன், மகன் இந்திரஜித் ஆகியோரை இழந்த ராவணன், ராமனைப் பழி வாங்கத் துடித்தான். இனி யாரையும் நம்ப மாட்டேன்; நானே நேருக்கு நேர் மோதி ராமனை வெல்வேன் என்று சபதம் செய்தான். யுத்த ரதம் என்னும் கவசமிட்டு ஆயுதங்களுடன் தேரில் போர்க்களம் சென்றான். ராமரோ பாதரட்சை (காலணி) கூட இல்லாமல் வில் மட்டும் ஏந்திச் சென்றார். அப்போது விபீஷணன், வெறும் வில்லேந்திச் செல்லும் உங்களால் ராவணனை வெல்ல முடியுமா? என்று கேட்டான். அப்போது ராமர் விபீஷணனைத் தைரியப்படுத்த சொன்ன உபதேசமே ராம கீதை. உடல் வலிமை, ஆயுதம் ஆகியவற்றால் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானது. நேர்மை, தர்மம் போன்ற உயரிய பண்புகளே மனிதனுக்குரிய ஆயுதங்கள். இதுவே நிரந்தர வெற்றி தரும்,என்பதே ராமகீதையின் கருப்பொருள்
           திருமண வீட்டில் வெற்றிலை பாக்கு கொடுப்பது ஏன் தெரியுமா


சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும்போதும், வழியனுப்பும் போதும் லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு கொடுப்பது வழக்கம். இதனை தாம்பூலம் என்பர். சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மீண்டும் இன்னொரு சுபவிஷயத்தில் சேர வேண்டும் என்பதற்காக இவ்வாறு தரும் வழக்கம் உருவானது.
உறவு நீடிக்கவேண்டும் என்பதும் காரணம்.
    பெற்றோரை மதிக்காதவன் தெய்வத்தை வணங்கினால் பலன் இல்லை




பெற்றோருக்கு சேவை செய்த ஹரிதாஸ் என்ற பக்தரை எதிர்பார்த்து, பாண்டுரங்கன் காத்திருந்ததாக வரலாறு கூறுகிறது. கண்கண்ட தெய்வமான பெற்றோரை மதிக்காமல் கடவுள் மீது பக்திசெலுத்துவதால் பயனில்லை. மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்கிறது வேதம். இதையே அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் அவ்வையார். பெற்றோருக்குப் பணிவிடை செய்வது பிள்ளைகளின் கடமை
                                            கடவுளிடம் வேண்டியது பணிவா? பயமா?


பயபக்தி என்றே சொல்வார்கள். கடவுள் தண்டிப்பவர் என்ற எண்ணத்தால், பக்தி முதலில் பயத்துடன் தொடங்கும். ஆனால், மனம் பக்குவம் பெற்ற பின், எல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உண்டாகும். அப்போது பயம் பணிவாக மாறி விடும். இதை திருவள்ளுவர், கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்று குறிப்பிடுகிறார்.
                                ...............................திருவிளையாடல்................................
                             வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது பரமசிவன் கழுத்தில் இருந்தால் கருடனால் நெருங்க முடியுமா! அதுபோல் தான் ஊரில் எத்தனை யானை இருந்தாலும், ஐராவத யானை வெள்ளை நிறம் என்பதால், அதற்கு மிகவும் கர்வம்.அகம்பாவிகளுக்கு என்றாவது ஒருநாள் அடி விழும். அப்படி ஒரு சோதனை ஐராவதம் யானைக்கும் ஏற்பட்டது. இந்திரன் தேவலோகம் வந்ததும், அவனை ஏற்றிக் கொண்டு இந்திரபுரிக்குள் அட்டகாசமாக நுழைந்தது. துர்வாசர் என்ற மகரிஷி இருந்தார். அவருக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். சிறிது பிசகலாக பேசினாலோ, நடந்தாலோ கூட மூக்கு மேல் கோபம் வந்துவிடும். அப்படிப்பட்ட கோபக்காரரிடம் அந்த யானை மாட்டிக் கொண்டது. அன்று துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வணங்கினார். அவரது பக்திக்கு மகிழ்ந்த ஈசன், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றை கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்த பிரசாதத்தை எடுத்து முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார். இந்திரனை தேவர்கள் ஆரவாரமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர். இவ்வளவு அடிபட்டும் இந்திரனுக்கு அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. மேலும் விருத்திராசுரனையே வென்று விட்டோமே என்ற மமதையுடன் வந்தான். எதிரே வந்த துர்வாசர், அவன் நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கமண்டலத்தில் இருந்த பொற்றாமரையை அவனிடம் கொடுத்தார். பிரசாதம் வாங்கும் போது பணிவு வேண்டும்.
இந்திரன் சற்றும் பணிவின்றி அந்த தாமரையை அலட்சியமாக வாங்கி அதை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானை அதை தும்பிக்கையால் எடுத்து கால்களில் போட்டு மிதித்து விட்டது. துர்வாசர் நெருப்பு பொங்கும் கண்களுடன் இந்திரனையும், யானையையும் பொசுக்கி விடுவது போல பார்த்தார். தேவேந்திரா... என்று அவர் கோபத்தில் எழுப்பிய சப்தம் அந்த பிரதேசத்தையே கிடுகிடுக்கச் செய்தது. விட்டது வினை என்று இங்கு வந்தால் இந்த துர்வாசரிடம் சிக்கிக் கொண்டோமே என்று இந்திரன் நடுங்கினான். அவன் எதிர்பார்த்தபடியே துர்வாசர் சாபமிட்டார். ஏ இந்திரா! கடம்பவன நாதனான எம்பிரானின் பிரசாதத்தையா அலட்சியம் செய்தாய்! அதை மரியாதையுடன் பெற்றிருந்தால், உன் நிலையே வேறு விதமாக இருந்திருக்கும்! ஆனால், கேடு கெட்ட இந்த யானையிடம் கொடுத்தாய். அது காலில் போட்டு மிதித்தது. தேவனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்து விடும், என்றார். தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர். யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர்.
துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். கோபம் உள்ள இடத்தில் தானே குணமும் இருக்கும்! அவர் இந்திரனிடம், இந்திரா! கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், பாண்டிய மன்னன் பயன்படுத்தும் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும் நிலை வரும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும், என்றவர் யானையைப் பார்த்தார். ஏ ஐராவதமே! பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு உன் வாழ்க்கை இந்த உலகத்துக்கு பாடமாக இருக்க வேண்டும். உன் வெள்ளை நிறம் அழிந்து போகும். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் பிற யானைகளுடன் கலந்து, புழுதி படிந்து நூறாண்டு காலம் திரிவாய். பின்னர், இந்திர லோகத்தை அடைவாய், என சாபமிட்டார். வெள்ளை யானை கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. ஒருவழியாக நூறாண்டுகள் கடந்தன. பல வனங்களில் சுற்றிய அந்த யானை, கடம்ப வனத்துக்குள் புகுந்தது. அதுவே இந்திரனால் உருவாக்கப்பட்ட மதுரையம்பதி. அங்கிருந்த சொக்கலிங்கத்துக்கு அது பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. தங்கத் தாமரைகளைப் பறித்து வந்து தூவி வழிபட்டது. அந்த யானையின் மீது இரக்கம் கொண்ட சொக்கநாதர் அதன் முன் தோன்றினார். ஐராவதமே! நீ செய்த சிவஅபச்சாரம் நீங்கியது. நீ இந்திரலோகம் திரும்பலாம்,என்றார். யானை சிவனிடம், எம்பெருமானே! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே! தங்கள் விமானத்தை (கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு) தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது. சிவபெருமான் அதனிடம், ஐராவதமே! இந்திரன் எனது பக்தன். அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும். நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார். மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார்.அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது. வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது. பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.
                                     ஒவ்வொருவரும் நாக்கு மாதிரி இருங்க!



இலங்கை மன்னனாக முடிசூடிய விபீஷணனிடம் அனுமன், தர்ம வழியில் வாழ விரும்பும் நீ, இத்தனை காலம் எப்படி ராவணனோடு இருந்தாய்? என்று கேட்டார். அதற்கு விபீஷணன்,மனதில் உறுதி இருந்தால், சூழ்நிலை ஒருவரைப் பாதிப்பதில்லை. நாக்கு மென்மையானது. அதைச் சுற்றியுள்ள 32 பற்களும் கடினமானவை. நாக்கில் உணவு விழுந்ததும், சுற்றியுள்ள பற்கள் கடிக்கவும், அரைக்கவும் செய்கின்றன. ஆனாலும், அவற்றுக்கு இடையே கடிபடாமல் இருக்கும் நாக்கு போல நானிருந்தேன், என்றான் விபீஷணன். கெட்ட பழக்கங்கள் பல நம்மைச் சுற்றி இருந்தாலும் அவற்றில் சிக்காமல் இருக்க வேண்டும்.
                        புனித தீர்த்தத்தில் நீராடினால் செய்தபாவம் போகுமா


கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சேரும் புனிதத்தலம் திரிவேணி சங்கமம்.இங்கு நீராடினால் பாவம் தீரும் என்பது ஐதீகம். கோரக்கும்பர் என்ற மகான், திரிவேணி சங்கமத்திற்குச் சென்ற பக்தர்களிடம் பாகற்காய் ஒன்றைக் கொடுத்து, எனக்காக இதனைப் புனித நீராட்டுங்கள் என வேண்டிக் கொண்டார். அவர்களும் அதை தண்ணீரில் நனைத்து வந்தனர். அதைப் பெற்ற கோரக்கும்பர் அதைப் பல துண்டாக நறுக்கி,ஆளுக்குஒன்றாக சாப்பிடக் கொடுத்தார். பாகற்காய் கசக்கும் என்பதால் அவர்கள் சாப்பிடவில்லை. புனித தீர்த்தங்களில் நீராடினாலும் பாகற்காய் இனிக்காது. அதுபோல் தான் உங்கள் நிலையும்! என்றார் அவர். வெறும் தீர்த்த நீராடலால் பாவம் போகாது. மனமாற்றம் ஒன்றே பாவத்தைப் போக்கும் சக்தியுள்ளது என்பதை இந்த செயல்மூலம்அவர்உலகுக்குஉணர்த்தினார்.