திங்கள், 4 மே, 2015

                                               இந்திரன் பழிதீர்த்தப் படலம்!




ஆசிரியரை மாணவர்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக சிவபெருமானின் முதல் திருவிளையாடல் அமைந்தது. தேவலோகத்தின் அரசன் யார் என்றால் தேவேந்திரன் என்று பச்சைக்குழந்தை கூட பதில் சொல்லிவிடும். அவன் தேவேந்திரன் என்றாலும், அவனுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு. குறிப்பாக, தலைமை பொறுப்பில் உள்ளவன், சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தனது பொறுப்பில் பலர் இருக்கிறார்களே என்ற அக்கறை வேண்டும். இல்லாவிட்டால், பதவி பறிபோய் விடும். தேவேந்திரனுக்கும் ஒருநாள் அப்படியொரு நிலை வந்தது. பூலோகத்தில் புண்ணியம் செய்தவர்களே தேவர் என்ற அந்தஸ்தை அடைகிறார்கள். பூலோகத்தில் அவர்கள் அடைய நினைத்த இன்பமெல்லாம் அங்கே கிடைக்கும். அதற்காக எதற்கும் ஒரு நேரம், காலம் உண்டல்லவா! அங்கும் நல்லநேரம், கெட்ட நேரமெல்லாம் உண்டு. தேவேந்திரனுக்கு ஒருநாள் கெட்ட நேரம் வந்தது பெண்களின் வடிவில்! தேவலோகத்தில் தேவர்கள் கூடிக்களித்திருக்க, நாட்டியத்தை ரசிக்க அப்சரஸ்கள் எனப்படும் தேவகன்னியர் உண்டு. அவர்களில் ரம்பா, ஊர்வசி, திலோத்தமா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த தேவேந்திரன், பல அப்சரஸ்களின் அழகில் மயங்கி லயித்துக் கிடந்தான். அந்த நேரத்தில் தேவர்களின் குருவான பிரகஸ்பதி அங்கு வந்தார். இவர் யார் தெரியுமா? நவக்கிரக மண்டபத்தில் மஞ்சள் உடை உடுத்தி வடக்கு நோக்கி ஒரு சிற்பம் இருக்குமே! அந்த குரு பகவான் தான்! இவரது பார்வை ஒரு இடத்தில் பட்டாலே நல்லது நடக்கும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.
தேவேந்திரனுக்கு தான் கெட்ட நேரமாயிற்றே! இல்லாவிட்டால், பொறுப்புள்ள பதவியிலுள்ள ஒருவன், பெண்களுடன் பொது இடத்தில் கூடிக் களிப்பானா? மறைவிடத்து விஷயங்கள் பொது இடத்தில் நடந்தால், யாரால் கண் கொண்டு பார்க்க முடியும்! பிரகஸ்பதி, தேவேந்திரன் நிகழ்த்திய கூத்தைப் பார்த்து, அப்படியே கண்ணைப் பொத்திக் கொண்டார். குரு பார்வையை மூடினால், நிலைமை என்னாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவேந்திரனுக்கு ஆரம்பமானது கெட்ட நேரம்.பிரகஸ்பதி, அப்படியே திரும்பிப் போய் விட்டார். தேவேந்திரன் தன் ஆட்டபாட்டத்தை முடித்துக் கொண்டு, தனது அந்தரங்க அறைக்குள் செல்லும் வேளையில், தேவர்களில் சிலர் அவனைப் பார்த்தனர். தேவேந்திரா! குருநாதர் பிரகஸ்பதி வந்திருந்தார். தாங்கள் அந்நேரத்தில் இருந்த நிலை கண்டு, கண் பொத்தி வெளியேறி விட்டார். உடனடியாக அவரைச் சந்தித்து, மன்னிப்பு கேளுங்கள். குருவின் ஆதரவு இல்லாவிட்டால் தங்களுக்கு மட்டுமல்ல! தங்களை நம்பியிருக்கும் எங்களுக்கும் சிரமம் வந்து சேரும், என்றனர். தேவேந்திரன் கதிகலங்கி விட்டான். குரு நிந்தை செய்தோமே! என்ன நடக்கப் போகிறதோ? உடனே அவரை சென்று பார்த்து வருகிறேன், என்று அவரது இல்லத்துக்கு தனது வெள்ளை யானையான ஐராவதத்தில் ஏறி விரைந்தான்.
குரு அங்கே இருந்தால் தானே! சிலருக்கு திருமணமாகாமலே இருக்கும். அதற்கு காரணம் என்ன தெரியுமா? குடும்பத்தினர் அல்லது முன்னோர் செய்த பாவத்தின் விளைவே அது. இவர்கள் மீது குருவின் பார்வை பட வேண்டுமானால், பெரும் பரிகாரங்களை எல்லாம் செய்தாக வேண்டும்! தேவேந்திரனின் பார்வையில், குரு படவே இல்லை. தனது தலைமை சீடனே இப்படியிருந்தால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்? பெண் பித்தர்களான இவர்களுக்கு போய் பாடம் எடுத்தோமே என்ற வேதனையில் குரு மறைவான இடத்துக்குப் போய் விட்டார். தேவேந்திரன் அவரைத் தேடியும் காணாமல், அவன் பிரம்மாவைப் பார்க்க ஓடினான். குரு அபச்சாரம் செய்து விட்டதை அவரிடம் சொன்னான். பிரம்மா ஒரு யோசனை சொன்னார். தேவேந்திரா! குரு நிந்தனை கொடிய பாவம். இதற்கு தகுந்த பரிகாரம் செய்தால் தான் அவர் உனக்குத் தென்படுவார். அந்த பரிகாரத்தையும் நான் சொல்கிறேன் கேள். துவஷ்டா என்ற அசுரன் ஒரு மகனைப் பெற்றிருக்கிறான். அவனது பெயர் விஸ்வரூபன். அவனுக்கு மூன்று முகம். மிகவும் கொடியவன். ஆனால், ஆச்சார அனுஷ்டானங்களை சரியாகக் கடைபிடிப்பவன். அவனை உன் தற்காலிக குருவாக ஏற்றுக்கொள். வேறு வழியில்லை, என்றார். குரு பார்வை இல்லாவிட்டால் கெட்ட நேரம் விடவே விடாது. இந்திரன் அதற்கு விதிவிலக்கா என்ன! பெரியவர்கள் ஒன்றைச் சொன்னால், அதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
தன்னிலும் உயர் பதவியிலுள்ள, வேதநாயகனான நான்முகன் சொன்ன யோசனை இந்திரனுக்குப் பிடிக்கவில்லை. தேவலோகத்துக்கு ஒரு அசுரனை குருவாக நியமிக்கச் சொல்கிறாரே! இவருக்கு என்ன ஆயிற்று? என்று எண்ணியபடியே சென்றான். இருப்பினும், அவரது யோசனையை செயல்படுத்தாவிட்டால் அவரது பகையையும் சம்பாதிக்க நேரிடும். மேலும், தேவலோகத்துக்கு ஒரு குருவும் நிச்சயம் வேண்டுமே என்ற எண்ணத்துடன் விஸ்வரூபனை சந்தித்து அவனை வணங்கினான். என்ன இந்திரா! தேவலோகாதிபதி என்னைத் தேடி வந்திருக்கிறாய்! என்ன விஷயம்? என்றான். தங்களை குருவாக ஏற்க வந்துள்ளேன். தாங்கள் தேவலோக குரு பதவியை ஏற்க வேண்டும், என்றான். விஸ்வரூபனுக்கும் இதில் மனமில்லை. அசுரனான நாம், தேவர்களுக்கு குருவாக இருப்பதாவது! இருப்பினும், தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டு வைக்கலாமா! சிங்கமாக இருந்து இந்த தேவர்களை ஒரு வழி செய்து விட வேண்டும். ஏழு உலகிலும் அசுரக்கொடி பறக்க இதை விட அருமையான சந்தர்ப்பம் ஏது? என்று எண்ணி யவனாய், பதவி ஏற்க சம்மதித்தான். ஆக, மாணவனுக்கும் மனமில்லை, குருவுக்கும் வஞ்சக எண்ணம் என்ற ரீதியில் தேவர்கள் அசுரர்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கினர்.
ஒரு வழியாக விஸ்வரூபன் தேவர்களுக்கு குருவானான். தேவேந்திரனுக்கு தன் குலகுரு பிரகஸ்பதிக்கு செய்த துரோகம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அவரது அதிருப்தியில் இருந்து விடுபட்டு பாவம் நீங்குவதற்காக யாகம் ஒன்றை நடத்த எண்ணம் கொண்டான். தன்னுடைய விருப்பத்தை விஸ்வரூபனிடம் தெரிவித்தான். புதிய குரு விஸ்வரூபன் யாகம் நடத்த ஒப்புதல் கொடுப்பது போல நடித்து, இதையே சந்தர்ப்பமாக்கி தேவேந்திரனை கொன்று தேவலோகத்தை நிரந்தரமாக கைப்பற்றி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டான். ஒருவருக்கு குரு பார்வை இல்லாவிட்டால் துன்பங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தேவேந்திரனுக்கு இந்த யாகத்தின் மூலம் பெரும் துன்பம் வந்து சேர இருந்தது. யாகம் துவங்கியது. விஸ்வரூபன் யாகத்திற்கு தலைமை வகித்தான். யாக குண்டத்தில் நெய்யை வார்க்கும்போது, தேவர்குலம் தழைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அரக்கர் குலம் தழைக்க வேண்டும் என்று சொல்லி நெய்யை ஊற்றினான். மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்தான். அவன் என்ன செய்கிறான் என்பதை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. தேவேந்திரன் சுதாரித்துக் கொண்டான். தன் ஞானதிருஷ்டியால் எதிரே அமர்ந்திருக்கும் விஸ்வரூபன் குரு என்ற போர்வையில் தனக்கு எதிராக மந்திரங்களை உச்சரிக்கிறான் என்பதை தெரிந்துகொண்டான். அவனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தனது வஜ்ராயுதத்தை எடுத்து விஸ்வரூபன் மீது வீசினான். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு தப்பியவர்கள் யாருமில்லை. விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் அது கொய்தது. அந்த தலைகள் மூன்று பறவைகளாக உருமாறி வானில் பறந்தது. எப்படியோ விஸ்வரூபனின் ஆவி பிரிந்துவிட்டது. ஏற்கனவே பிரகஸ்பதியின் சாபத்தை பெற்றுக்கொண்ட இந்திரன், இப்போது புதிய குருவான விஸ்வரூபனையும் கொன்றுவிட்டதால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) பற்றிக் கொண்டது. ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டால் அதற்கு மாபெரும் பரிகாரங்களை செய்தாக வேண்டும். அந்த பரிகாரங்களை எல்லாம் தேவர்கள் செய்தனர். இதன் மூலம் அந்த தோஷம் நீங்கியது. ஆனால் அசுரர்களின் பகையை அவன் அதிகமாக சம்பாதித்துக்கொண்டான். விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா. இவர் தன் மகனைக்கொன்ற தேவேந்திரனை பழிவாங்க எண்ணம் கொண்டார். இதற்காக யாகம் ஒன்றை துவங்கினார். அந்த யாகத்தீயிலிருந்து பயங்கர ஆயுதங்கள், கோரைப்பற்கள், நாற்பது கைகளுடன் ஒரு அரக்கன் தோன்றினான். அவனது கண்களிலும் வாயிலும் விஷவாயு வெளிப்பட்டது. அவன் துவஷ்டாவை வணங்கிநின்றான்.
தலைவனே! உன் கட்டளைக்கு அடிபணிந்து உன் முன்னால் நிற்கிறேன். உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு துவஷ்டா, சீடனே! உனக்கு விருத்திராசுரன் என பெயர் சூட்டுகிறேன். நீ இப்போது இருப்பதைவிட பலமடங்காக உன் உருவத்தை வளர்த்துக்கொள்ளும் வரத்தையும் தருகிறேன். உன் உருவம் வளர வளர கோபமும் அதிகமாகும். அந்த கோபத்தை பயன்படுத்தி நீ தேவர்குலத்தை அழிக்க வேண்டும். குறிப்பாக என் மகன் விஸ்வரூபனை கொன்ற இந்திரனின் உயிர் எனக்கு வேண்டும். உடனே புறப்படு! என ஆணையிட்டார். விருத்திராசுரன் தனது நாற்பது கைகளிலும் பல்வேறு ஆயுதங்களை தாங்கி இந்திரனை தேடி புறப்பட்டான். விருத்திராசுரன் தன்னை நோக்கி வருவதை இந்திரன் அறிந்துகொண்டான். அவன் தனது வாகனமாகிய வெள்ளை ஐராவதத்தில் அமர்ந்து புறப்பட்டான். இருவரும் வானவெளியில் சந்தித்தனர். கடும் போர் ஏற்பட்டது. இந்திரன் தனது வஜ்ராயுதத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். அதை விருத்திராசுரன் மீது அவன் எறிந்தான். ஆனால் அது அவனை எதுவுமே செய்யவில்லை. தன் கையிலிருந்த இரும்பு தடியால் வஜ்ராயுதத்தை தடுத்து நிறுத்திவிட்டான் விருத்திராசுரன். மேலும் அந்த தடியால் இந்திரனையும் தாக்கினான். இந்திரன் மயங்கி விழுந்துவிட்டான். இந்திரன் இறந்துவிட்டான் என நினைத்த விருத்திராசுரன், துவஷ்டாவிடம் திரும்பி சென்றுவிட்டான். ஆனால் சிறிது நேரத்தில் இந்திரனுக்கு மயக்கம் தெளிந்து விட்டது. தான் உயிருடன் இருப்பது தெரிந்தால் விருத்திராசுரனால் ஆபத்து ஏற்படும் என பயந்துபோன இந்திரன் சத்யலோகத்திற்கு வந்துசேர்ந்தான்.அங்கு பிரம்மாவை வணங்கி, விருத்திராசுரனை கொல்வதற்குரிய வழி பற்றி கேட்டான். பிரம்மா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை. தேவேந்திரனே! விருத்திராசுரனை கொல்லும் வழியை நான் அறியமாட்டேன். அசுரர்களை கொல்லும் சக்தி ஸ்ரீமந் நாராயணனுக்கே இருக்கிறது. நாம் அவரிடம் சென்று யோசனை கேட்டு வரலாம் என சொல்லி வைகுண்டம் சென்றனர். அங்கே திருமால் ஆதிசேஷன் மீது துயில் கொண்டிருந்தார். பரந்தாமனாகிய பெருமாளை இருவரும் பாடித்துதித்தனர். திருமால் அவர்களிடம், என்ன காரணத் திற்காக வந்தீர்கள்? என கேட்டார்.
அவர்கள் வந்த காரணத்தை விளக்கினர். திருமால் இந்திரனிடம், தேவேந்திரா! திருப்பாற்கடலை கடைந்தபோது நீ உனது ஆயுதத்தை ததீசி முனிவரிடம் கொடுத்து வைத்தாய். ஆனால் அதை திரும்ப வாங்க மறந்துவிட்டாய். நீ வருவாய் என காத்திருந்த மகரிஷி வராமல் போனதால் அந்த ஆயுதங்களை விழுங்கிவிட்டார். அவை அனைத்தும் அவரது முதுகுத்தண்டில் சென்று சேர்ந்துவிட்டது. அந்த மகரிஷியிடம் வேண்டி அவரது முதுகுத் தண்டை பெற்று அதை ஆயுதமாக பயன்படுத்தி போரிட்டால் விருத்திராசுரன் மடிவான்.ஆனால் முதுகுத் தண்டை உனக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டால் மகரிஷி இறந்துவிடுவார். இனி அதை பெறுவது உன்னுடைய வேலை என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.தேவேந்திரன் ததீசி முனிவர் தவம் செய்துகொண்டிருந்த ஆசிரமத்திற்கு சென்றார். அவன் வந்த காரணத்தை அறியாத முனிவர் அவனை வரவேற்றார். ததீசி முனிவருக்கு இந்திரன் தான் கொண்டு வந்த மங்கலப் பொருட்களை சமர்ப்பித்தான். பெரியவர்களைப் பார்க்க வெறும் கையுடன் செல்லக்கூடாது. பழம், பூமாலை முத லானவற்றை வாங்கிச் செல்வது உத்தமம். தேவேந்திரன் அதையே செய்திருந்தான். அவன் வந்த காரணத்தை ததீசி முனிவர் கேட்டார். தேவேந்திரா! திடீரென என்னைத் தேடி வந்த காரணம் என்ன?என்றார். ஒருவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், முதுகுத்தண்டை கேட்பது என்றால்... முதுகுத்தண்டை சாதாரணமாகவா எடுக்க முடியும்? உயிர் பிரிந்தால் தானே அது சாத்தியம்... இருந்தாலும், நாராயணன் இப்படி சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி, அவரிடம் விஷயத்தை விளக்கினான் தேவேந்திரன். ததீசி முனிவரின் முகம் பிரகாசமானது. இப்படி ஒரு பாக்கியம் எனக்கா? தாராளமாக என் முதுகெலும்பை எடுத்துக் கொள் தேவேந்திரா. தேவர்களைப் பாதுகாக்க என் முதுகுத்தண்டு உதவுமென்றால் அதை விட வேறு என்ன பேறு எனக்கு வேண்டும்? என்று அகம் மகிழச் சொன்னார். உனக்காக உயிரையும் கொடுப்பேன் கண்ணே! என்று காதலன் காதலியிடமும், கணவன் மனைவியிடமும் வசனம் வேண்டுமானால் பேசலாம். ஆனால், அதற்கு தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? ததீசி மனப்பூர்வமாக சம்மதித்தார். பத்து உயிர் வாழ்வதற்கு ஒரு உயிர் போகிறது என்றால் அதுபற்றி கவலைப்படவே கூடாது. இங்கோ! முப்பத்து மூன்று கோடி தேவர்களின் உயிர், முனிவரின் முதுகுத்தண்டில் இருக்கிறது என்பதால், அவர் உளப்பூர்வமாக சம்மதித்தார். உடனடியாக, அவர் யோகாவில் ஆழ்ந்தார். அவரது பிராணன் பிரிந்தது. பிறருக்காக உயிர் விட்ட அந்த ஆவியை வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து ஏற்றிக்கொண்டு சிவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன், முனிவரின் முதுகுத்தண்டுடன் சென்று, விருத்திராசுரனுடன் போரிட்டான். அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அசுரப்படைகள் முழுமையாக அழிந்து விட்டன. விருத்திரனுக்கு ஆச்சரியம். இப்படியும் ஒரு ஆயுதமா? இனியும் இவன் முன்னால் நின்றால் உயிரிழக்க நேரிடும் என்றெண்ணிய அவன் கடலுக்குள் போய், அங்கே ஏற்கனவே மறைந்திருந்த அசுரர்களுடன் போய் இணைந்து கொண்டான். தேவேந்திரன் பிரம்மாவிடம் ஓடினான். கடலுக்குள் மறைந் தவனை எப்படி பிடிப்பது என்று யோசனை கேட்டான்.
மகரிஷி அகத்தியரால் மட்டுமே அது முடியும். காவிரியையும், தாமிரபரணியையும் தன் கமண்டலத்துக்குள் அடக்கியவர் அவர். அவரைச் சந்தித்தால் இதற்கு விடிவு பிறக்கும், என்றார். இந்திரன் அகத்தியரைத் தேடிச் சென்று நமஸ்கரித்து, வந்த விஷயத்தைச் சொன்னான்.அதுபற்றி கவலை வேண்டாம், என அருள் பாலித்த அகத்தியர், அந்தக் கடலருகே சென்று உளுந்து அளவுக்கு மாற்றி, அதை உள்ளங்கையால் அள்ளி பருகி விட்டார். வற்றிப் போன கடலுக்குள் அசுரர்கள் அங்குமிங்கும் ஓடினர். விருத்திராசுரனை நோக்கி முதுகுத்தண்டை வீசினான் தேவேந்திரன். அது அவனை விரட்டிச் சென்று தலையைக் கொய்தது. குரு நிந்தனை மிகவும் பொல்லாதது. எப்படி தெரியுமா? விருத்திராசுரன் மடிந்த அடுத்தகணமே கொலைப் பாவமான பிரம்மஹத்தி அவனைத் தொற்றிக் கொண்டது. குருவை ஒருமுறை அவமதித்ததால், அவன் தொடர்ந்து அவஸ்தைகளை அடைந்து வந்தான். இன்னும் அது தீர்ந்தபாடில்லை. நாராயணன், பிரம்மா ஆகியோர் இருந்தும், இரண்டு மகரிஷிகளின் உதவி இருந்தும் இப்படி ஒரு நிலை. அதனால் தான் தெய்வத்துக்கு முன்னதாக குருவுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள் பெரியவர்கள். கொலைப் பாவம் காரணமாக, இந்திரனுக்கு சித்த பிரமை ஆகி விட்டது. அவன் தரையில் உருண்டு புரண்டு அரற்ற ஆரம்பித்தான். பின்னர், ஒரு தாமரைத் தண்டுக்குள் சென்று அதனோடு ஐக்கியமாகி விட்டான். இப்போது தேவலோகத்தில் தலைமைப் பொறுப்பு காலியாகி விட்டது. தேவேந்திரன் போன இடம் தெரியவில்லை. இதனால் நகுஷன் என்ற தேவனை இந்தப் பதவியில் தேவர்கள் அமர்த்தினர். நகுஷன் பதவிக்கு வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டான். இந்திரப்பதவியில் இருக்கும் எனக்கு இந்திராணி சொந்தமாக வேண்டும் என்று வாதம் செய்ய ஆரம்பித்து விட்டான். இந்திராணிக்கு பல வகைகளிலும் தொந்தரவும் கொடுத்தான். இந்திராணி அதற்கு படியவில்லை.
ஒருநாள் இந்திராணியை தன் அந்தப்புரத்துக்கு இழுத்து வாருங்கள் என்று காவலர்களுக்கு உத்தரவு போட்டான். இந்த விஷயம் தேவகுருவிற்கு தெரிந்து விட்டது. ஆஹா... நம்முடைய பிடிவாதத்தால் இந்திராணிக்கு களங்கம் வரலாமா? அவளது கற்புக்கு பங்கம் வந்தால் நான் தானே பொறுப்பு, என்று முடிவெடுத்து, தேவலோகம் சென்றார். இந்திராணி அவரது பாதங்களில் விழுந்து, தன் கணவர் மீது கொண்ட கோபத்தை மறந்து விடும்படியும், தன் கற்பிற்கு பாதுகாப்பு கேட்டும் மன்றாடினாள். அவளது கண்ணீர் பிரகஸ்பதியைக் கரைத்தது. குரு பலம் குறைந்தவர்கள், நவக்கிரக சன்னதியில் உள்ள குருவிடம், கண்ணீர் விட்டு மன்றாடினால், இரக்க குணமுள்ள குரு, சோதனைகளைக் குறைப்பார் என்பது இதில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல். குருதேவர், அவளை சமாதானம் செய்து, ராணி! கவலை படாதே. நகுஷன் உயர்பதவியில் இருக்கிறான், அவன் மாபெரும் வீரன் வேறு, அவனை அவ்வளவு எளிதில் யாராலும் அடக்க முடியாது. அந்த பராக்கிரமசாலியை அடக்க ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். அவனை ஒரு தங்கப்பல்லக்கில் அமர்ந்து, ஏழு ரிஷிகள் அதனை தூக்கி வர வேண்டும் என்றும், அவ்வாறு என்னை (இந்திராணி) காண வந்தால், நான் உமது மனைவியாவேன், என்று சொல்லியனுப்பு, என்றார். குருவின் கட்டளையை ஏற்ற இந்திராணியும் அவ்வாறே செய்தாள். நகுஷன் சப்தரிஷிகளை வரவழைத்தான். ஏ ரிஷிகளே! என்னை இந்திராணியின் இருப்பிடத்துக்கு பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லுங்கள், என உத்தரவு போட்டான். பல்லக்கு புறப்பட்டது. அவர்களில், ஒரு ரிஷி மட்டும் சற்று மெதுவாகச் சென்றதால், மற்றவர்களும் மெதுவாக நடக்க வேண்டியதாயிற்று. நகுஷன் பல்லக்கில் இருந்தபடியே, மெதுவாகச் செல்பவன் யார்? என்று ஒருமையில் கத்தினான். அந்த முனிவர் அவனை எட்டிப்பார்த்தார்.
ஓ அகத்தியரா! இந்தக் குள்ளனால் தான் தாமதமா? அகத்தியரே! என் அவசரம் உமக்கென்ன தெரியும்? இந்திராணியை அடைய வேண்டும் என்ற விரகம் தாளாமல் அவதிப்படும் என்னைக் கொஞ்சமாவது புரிந்து கொண்டீரா? பருந்தைக் காணும் பாம்பு எப்படி வேகமாக ஊர்ந்து செல்லுமோ அதைப் போல் பல்லக்கை வேகமாகச் சுமந்து செல்லுங்கள், என உத்தரவிட்டான். அகத்தியர் சாதாரணமானவனரா? தன்னை அவமதித்த அந்த காமாந்தகாரனை விடுவாரா? நகுஷா! நீதிமுறை பிறழ்ந்து நெறிகெட்ட வார்த்தைகளைப் பேசினாய். உன் மோகத்தைத் தீர்க்க சப்தரிஷிகளான எங்களை பாம்பு போல் விரைந்து செல்லச் சொன்னாயே! அடேய், அந்தப் பாம்பாகவே நீ மாறுவாய். இப்போதே இறப்பாய்! என்று சாபமிட்டார். பெரியவர்கள் நம்மைச் சுமப்பவர்கள். குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து, அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, இளையவர்களை வளர்ப்பவர்கள். அவர்களை நாம் மதிப்புடன் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நகுஷனைப் போல் கடும் சாபத்துக்கு ஆளாகி, நம்மையே இழந்து விடுவோம். அகத்தியரின் சாபம் பொய்க்குமா? உடனடியாகப் பலித்து விட்டது. நகுஷன் பாம்பாக மாறி பல்லக்கில் இருந்து விழுந்து படமெடுத்து தன்னைச் சுற்றி நின்ற காவலர்களை கடிக்கச் சென்றான். உடனே காவலர்கள் அதைக் அடித்தே கொன்று விட்டனர். பாம்பு இறந்தது. அகத்தியரால் நகுஷன் மாண்ட செய்தி இந்திராணியை எட்டியது. தனது கற்புக்கு களங்கம் வராமல் காப்பாற்றிய அகத்தியரை அவள் மனதார வணங்கினாள். பின்னர் தேவகுரு பிரகஸ்பதி, தாமரை தடாகத்தில் மறைந்திருந்த இந்திரனைத் தேடிச் சென்று அவனை வரவழைத்தார். குரு பார்க்க கோடி நன்மை ஆயிற்றே! இந்திரன் தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு அவரது பாதங்களைப் பற்றிக்கொண்டான்.
குருவே! அடியேன் தங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவை அனுபவித்து விட்டேன். தங்களுக்கு அவமானம் விளைவித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் மனைவியின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். தங்கள் கிருபை வேண்டும், என பிரார்த்தித்தான். பின்னர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக பூலோகம் சென்று அங்குள்ள புனிததீர்த்தங்களில் நீராடும்படியும், தேவர்கள் எல்லோருமே அங்கு செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். அதன்படி இந்திரனின் தலைமையில் புஷ்பக விமானத்தில் அனைவரும் பூலோகம் புறப்பட்டனர். பனிபொங்கும் கயிலைமலையில் இறங்கிய அவர்கள் சிவபெருமானையும், உமாதேவியையும் வணங்கி கேதாரம், காசி உள்ளிட்ட தலங்களைத் தரிசித்தனர். கங்கை, யமுனை, சரஸ்வதியில் நீராடினர். நாம் பூலோகத்தில் வாழ்கிறோம் என்றால் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தேவர்கள் கூட அவர்கள் செய்த பாவம் நீங்க பூலோகத்து புண்ணிய தீர்த்தங்களை நாடித்தான் வர வேண்டியுள்ளது. ஆனால், அதன் அருமை தெரியாமல் நாம் ஆறுகளை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனியேனும், நதிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அவற்றுக்குரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் கடம்பவனத்தை அடைந்தனர். அங்கே ஒரு லிங்கம் தென்பட்டது. அதைக் கண்ட இந்திரன் அவ்விடத்தில் ஒரு தாமரைக் குளம் இருந்ததையும் பார்த்தான். அந்த தீர்த்தத்தில் தங்கத் தாமரைகள் பூத்திருந்தன. அந்த லிங்கத்திற்கு பூஜை செய்த இந்திரன், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம், உடனடியாக லிங்கம் இருந்த இடத்தில் அழகிய விமானம் அமைக்குமாறு பணித்தான். எட்டு யானைகள் தாங்கும் அழகிய விமானத்தை விஸ்வகர்மா அமைத்தார். பலநாட்களாக அங்கேயே தங்கி இந்திரன் பூஜைகள் செய்தான். அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. இறைவன் அவன் முன்னால் தோன்றி, இந்திரா! உன் மீதான சாபம் நீங்கியது. நான் இந்த தலத்தில் சொக்கநாதர் என்ற பெயருடன் எழுந்தருள்வேன். சோமசுந்தரர் என்றும் என்னை அழைப்பர். இத்தலத்துக்கு வருபவர்கள் தீராத பாவங்களும் நீங்கப்பெறுவர், என அருள் பாலித்தார். பின்னர் அனைவரும் தேவலோகம் சென்றனர்.
                          பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்!


குதிரைகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் அத்தனையும் நரிகளாக இருந்தன. பாண்டியன் கொதித்தான். இந்த அரிமர்த்தனனையே முட்டாளக்குகிறானா அந்த திருவாதவூரான்! பிடியுங்கள் அவனை! முதலில் அழகிய குதிரைகளைக் காட்டினான். இப்போது, நரிகளாக்கி விட்டான். மாயவித்தைக்காரனாக மாறிவிட்டானே! பணத்துக்காக இப்படி நாடகமாடுகிறான், என்று வசைமாரி பொழிந்தவன், பிடித்து வாருங்கள், அவனை மீண்டும், என்று கட்டளையிட்டான். காவலர்கள் சென்றனர். அவர் தியானம் செய்த அறைக்குச் சென்று கூச்சலிட்டு, பரிகளை நரிகளாகக்கி விட்டு, நீர் தியானத்தில் உள்ளீரா! வாரும் எங்களுடன், என இழுத்துச்சென்றனர். மன்னன் அவரைக் கடுமையாகப் பேசினான். பணத்தாசை பிடித்தவனே! உன்னைப் பார்க்கவே எனக்கு கண்கள் கூசுகின்றன. உன்னை ஆரம்பத்திலேயே கொல்லாமல் விட்டேனே! அதுதான் நான் செய்த குற்றம். இருப்பினும், அரசுப் பணத்தை உம்மிடமிருந்து கைப்பற்றியாக வேண்டும். அது மக்கள் பணம். அதைக் கொடுத்து விட்டு மறுவேலை பாரும், என்றவன் யாரங்கே? என்று கைதட்டி காவலர்களை அழைத்து, இவனிடமிருந்து பணத்தைக் கைப்பற்றும் வரை வைகையில் சுடுமணலில் படுக்க வையுங்கள், என்று கட்டளையிட்டான்.
காவலர்கள் அவரது காலிலும் கையிலும் பெரிய பாறாங்கற்களை தூக்கி வைத்துக் கட்டி மணலில் படுக்க வைத்தனர். மாணிக்கவாசகருக்கு கால் சூடுபொறுக்க முடியவில்லை. ஆ ஆ..வென அலறினார். மீனாட்சியம்மன் கோபுரம் தூரத்தில் தெரிந்தது. இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். இந்த அபயக்குரல், கோயிலுக்குள் இருந்த சுந்தரேஸ்வரப் பெருமானை உருக்கியது. ஆனாலும், அந்த ஈசன் நல்லவர்களுக்கு சோதனைகளைத் தந்த பிறகு தான் இரங்குவான் போலும்! சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது. மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார்.
                                        நரியை பரியாக்கிய படலம்!


குதிரைகள் நீண்டநாட்களாக வரவில்லை. மன்னனு
க்கு சந்தேகம் ஏற்பட்டது. மாணிக்கவாசகரை அழைத்து விசாரித்தான். அவர் மூன்று நாள் தவணை கேட்டார். அதுவும் முடிந்தது. இதன்பிறகு, பொறுமையிழந்த மன்னன், வாதவூரானின் முகத்தில் நான் விழிக்க விரும்பவில்லை. ஏமாற்றுக்காரனுடன் என்ன பேச்சு! அரசுப்பணத்தைக் கையாடிய அவனை மந்திரி பதவியில் இருந்து நீக்குகிறேன். அவனைச் சிறையில் அடையுங்கள், சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். மாணிக்கவாசகரின் இல்லத்துக்கு காவலர்கள் சென்றனர். அவர் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். காவலர்கள் அரசன் இட்ட ஆணையைச் சொல்லவே, அவர் ஏதும் சொல்லவில்லை. நடப்பதெல்லாம் அவன் திருவிளையாடல் என அமைதியாக இருந்தார். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றினர். அதே நிலையில் சிறைக்குள் தள்ளினர். அந்தப் பாரத்தைக் கூட சிவனுக்காக சுமப்பதாக கருதினார் மாணிக்கவாசகர். பாறாங்கற்கள் பஞ்சுபோல் இருந்தது. மறுநாள் காவலர்கள் வந்தனர். அந்தக் கற்களைச் சுமந்ததால் சோர்ந்து மயங்கியிருப்பார் என நினைத்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வழக்கத்தை விட உற்சாகமாக இருந்தார். அவரை இரும்புக்கருவி ஒன்றைக் கொண்டு தாக்கினர். கண்டபடி திட்டினர்.
அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார். ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தன. குதிரைகள் பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அவன் பதறிப்போய் ஓடி வந்தான். மாணிக்கவாசகரை விடுவிக்க உத்தரவிட்டான். குதிரைகளைக் காண ஆவலுடன் மணிமண்டபத்தில் வந்தமர்ந்தான். இதற்குள் சிவபெருமான் தன் லீலையைத் தொடங்கி விட்டார். குதிரைகள் மக்கள் கண்களுக்கு தெரிந்தது. மன்னனின் கண்களுக்கு தெரியவில்லை. வாதவூரானே! என்ன விளையாடுகிறீரா! மற்றவர்களெல்லாம் குதிரைகளைக் கண்டு ஆரவாரம் செய்கிறார்கள், என் கண்களுக்கு தெரியவில்லையே, என்றான். மீண்டும் சிறைக்கு அவரை அனுப்பினான். சற்றுநேரத்தில், அரண்மனை கொட்டிலுக்குள் ஆயிரக்கணக்கான குதிரைகளும், வீரர்களும் நிற்பதைக் கண்ட காவலர்கள் மன்னனிடம் சொல்ல, இதென்ன புதுக்குழப்பம்? என்று அங்கு ஓடினான். இப்போது, குதிரைகள் கண்ணுக்குத் தெரிந்தன.
இப்படியும் அழகான குதிரைகளா! பாண்டியநாட்டு குதிரைப்படை போல், இனி எங்கும் குதிரைகளைக் காண முடியாது! அதோ! இந்த குதிரை படைக்கு தலைமை வகித்து வந்துள்ளானே ...ஒரு வீரன் (சிவன் அந்தக்குதிரையில் அமர்ந்திருந்தார்) அதைப் போல் சாமுத்ரிகா லட்சணம் கொண்ட குதிரை இனி பிறக்கவும் செய்யாது. பிற நாடுகளுக்கு கிடைக்கவும் செய்யாது! என பெருமையடித்தான். மாணிக்கவாசகரை விடுதலை செய்து மீண்டும் மன்னிப்பு கேட்டு, அவரது அருமை தெரியாமல் இருந்தது பற்றி தன் வருத்தத்தை தெரிவித்தான். குதிரைகள் மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டதும், தலைமை வீரனாக வந்த சிவனும், அவருடன் வந்த பூதகணவீரர்களும் கிளம்பிவிட்டனர். சற்றுதூரம் சென்றதும் அவர்கள் மறைந்து விட்டனர். மாணிக்கவாசகருக்கு மன்னன் அளித்த பரிசுக்கு அளவேயில்லை. அதைப் பெற்றுக்கொண்டு அவர் வீடு திரும்பிய போது, உறவினர்கள் எல்லாரும் அங்கு குவிந்திருந்தார்கள். அவர்களுக் கெல்லாம் தான் கொண்டுவந்ததில் பெரும்பகுதியை அள்ளி வழங்கினார் மாணிக்கவாசகர். பின்னர், பூஜையறைக்குச் சென்று சிவதியானத்தில் மூழ்கிவிட்டார். இரவாகி விட்டது. மக்கள் உறங்கும் வேளை... ஊ...ஊ... என எங்கும் ஒலி கேட்டது. காட்டுக்குள் அல்லவா நரிகள் ஊளையிடும்! நாட்டுக்குள் நரி சத்தம் கேட்கிறதே! மக்களுக்கு மட்டுமல்ல.... அரிமர்த்தன பாண்டியனுக்கும் அந்த ஒலி கேட்டது. மக்கள் சப்தம் வந்த திசை நோக்கி ஓடிவந்தனர்.
                                           மண் சுமந்த படலம்!

வைகை நதியின் வெள்ளப்பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. அரசன் அமைச்சர்களுடன் கலந்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பற்றி ஆலோசித்தான். கரைகள் உடைத்து மதிற்சுவர்களையும் சாய்த்ததால், ஊருக்குள் வெள்ளம் வரும் முன், கரைகளை உயர்த்த ஆணை பிறப்பித்தான். வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மக்களும் வைகைக் கரையில் குவிந்தனர். மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்தாள். அவள் முதுமையிலும் பிட்டு விற்று பிழைத்தவள். முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர் அவிக்கும் பிட்டை விற்க ஆரம்பிப்பாள். வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. அவளால் அந்த தள்ளாத வயதில் முடியுமா? ஆனாலும், கடமையுணர்வு மிக்க அவள், தன் இயலாமை பற்றி அதிகாரிகளிடம் சொல்லாமல், கூலிக்கு ஆள் தேடினாள்.சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். வந்தியின் முன் வந்து நின்றவர், பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலையுறதா என் காதுக்கு சேதி வந்தது. சரி..சரி... உன் பிட்டென்றால் எனக்கு அமிர்தம் மாதிரி. இந்தப் பிட்டை எனக்கு பசியாற கொடு. உன் பங்கு வேலையைச் செய்து விட்டு வருகிறேன், என்றார். என்னவோ, என் பிட்டை தினமும் சாப்பிட்டவன் போல் பேசுறியே! சரி...இதோ சுவாமிக்கு நிவேதனம் செய்த பிட்டு. இன்று சிவனடியார் யாரையும் காணலே! உன்னையே சிவனா நினைச்சுக்குறேன்! பிட்டை சாப்பிட்டுட்டு வேலைக்கு போ, என்றாள். சிவபெருமானும் பிட்டை ரசித்துச் சாப்பிட்டார். தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து சுறுசுறுப்பாக மண்வெட்டினார். அதன் பிறகு, ஓழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். சிறிதுநேரத்தில் சோம்பல் முறித்தார். திடீரென வந்தியின் வீட்டுக்குச் சென்று, பாட்டி பிட்டு கொடு, கூலியில் கழித்துக்கொள், என வாங்கி சாப்பிடுவார். ஒரு பகுதியை வேலை செய்யுமிடத்தில் நின்றவர்களுக்கு கொடுத்தார். அவ்வப்போது ஆடினார், பாடினார். தன்னுடன் வேலை செய்தவர்களையும் ஆடவைத்தார் அந்த ஆடல்வல்லான். ஆக, அவரது இடத்தில் வேலை நடக்கவில்லை. அப்போது, தலைமை கண்காணிப்பாளர் அங்கு வந்தார்.
ஏய்! என்ன கூத்து இங்கே! வேலைக்கு வந்தாயா?ஆட வந்தாயா? கிழவியிடம் பிட்டை வாங்கித் தின்றுவிட்டு ஆட்டமா போடுகிறாய்?என்று கண்டிக்கவும், அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்து விட்டான். அந்நேரத்தில் கண்காணிப்பாளர் சற்று ஒதுங்கிச் சென்று விட, மன்னனைக் கண்ட லோகநாயகனான சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கே வந்தான். கண்காணிப்பாளரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கினான். ஓங்கி முதுகில் ஒரு அடிவிட்டான். ஆவென அலறினான். அவன் மட்டுமல்ல! அங்கு நின்றவர்களெல்லாம் அலறினர். உலகமே அலறியது. அடி வாங்கியவர் எழுந்தார். ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். வெள்ளம் வற்றிவிட்டது. தான் அடித்த அடி தன் மீது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் விழுந்தது கண்டு அதிசயித்தான் அரிமர்த்தன பாண்டியன். மேலும், ஒரு கூடை மண்ணிலேயே கரை உயர்ந்து வெள்ளம் கட்டுப்பட்டது கண்டு வியப்பு மேலிட்டவனாய் கூலியாளாய் வந்தவரை பார்த்த போது, அவர் மறைந்து விட்டார். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானம் ஒன்று அவள் வீட்டு முன்பு இறங்கியது. அதில் வந்தவர்கள் அவளிடம், தாயே! நாங்கள் சிவகணங்கள். தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார்கள். தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு அரசாங்கம்? இதனால், என்ன பலன் கண்டேன். பிட்டு மட்டுமே சமைத்து, அதையும் இறைவனுக்கு சமர்ப்பித்து, அதில் கிடைக்கும் சிறு வருமானத்தில் மனநிறைவுடன் வாழ்ந்தவளை சிவகணங்களே நேரில் வந்து அழைத்துச் செல்கின்றனர். நானோ, அரசு, ஆட்சி, பணம், பதவி, சொத்து, சுகம் என திரிந்தேன். இதனால், நான் இறைவனிடம் செலுத்திய பக்தியும் பயனற்றதாகி விட்டது. இனியும் இந்த அரசாங்கம் எனக்கு வேண்டாம். இறைவா! என்னையும் ஏற்றுக்கொள், என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது.அரிமர்த்தனா! நீ சம்பாதித்த பொருளெல்லாம் தர்மவழியில் வந்தது. தர்மவழியில் வந்த பொருளையே நான் ஏற்பேன். மற்றவர்கள் பகட்டுக்காக வேண்டுமானால் எனக்காக செலவழிக்கலாம். அதை நான் ஏற்கமாட்டேன். உன் பொருளை மாணிக்கவாசகன் செலவழித்ததை நான் அன்புடன் ஏற்றேன். நரியைப் பரியாக்கி லீலை புரிந்தது நானே! என்றது. பாண்டியன் வேகமாக சிறைக்குச் சென்றான். அங்கே மாணிக்கவாசகர் இல்லை. கோயிலுக்கு ஓடினான். சுந்தரேஸ்வரப் பெருமான் முன்பு நிஷ்டையில் இருந்தார் மாணிக்கவாசகர். நடப்பது புரியாமல் சட்டப்படியாக நடந்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார்.
                                                    பாண்டியன் சுரம் தீர்த்த படலம்!


அரிமர்த்தனின் மறைவுக்குப் பிறகு பலர் மதுரையை ஆண்டனர். அவர்களில் ஒருவன் கூன் பாண்டியன் என்னும் நெடுமாறன். நெடுமாறனின் போர்த்திறமையும், புகழும் சோழ மன்னனை ஈர்த்தது. அவன் தன் மகள் மங்கையர்க்கரசியை நெடுமாறனுக்கு திருமணம் செய்து வைத்தான். அத்துடன், குலச்சிறையார் என்ற அறிவார்ந்த அமைச்சரையும் மதுரைக்கு அனுப்பி, தன் மருமகனுக்கு ஆலோசனைகள் வழங்குமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில், மதுரை மண்ணில் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் குடிபுகுந்தனர். மன்னன் நெடுமாறனை சமண மதம் ஈர்த்தது. மக்கள் சமண மதத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற உத்தரவையும் அவன் பிறப்பித்தான். இது மங்கையர்க்கரசியாருக்கும், குலச்சிறையாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மன்னனிடம் பேசும் துணிச்சல் அவர்களுக்கேது! மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரவே மக்கள் பயந்தனர். கோயில் காலியாகக் கிடந்தது. இந்த அவலநிலை பற்றி, சுந்தரேஸ்வரப் பெருமானிடமே சென்று பிரார்த்திக்க ராணி முடிவெடுத்தாள். குலச்சிறையாரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று, இருவருமாய் பிரார்த்தித்தனர். அப்போது அந்தணர் ஒருவர் சன்னதிக்கு வந்தார். கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உள்ளிட்ட யாருமே இல்லாத நிலையில், இவர் மட்டும் மன்னன் கட்டளையை மீறி எப்படி துணிச்சலாக உள்ளே வந்தார் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். வந்தவர் அரசியை வணங்கி, அரசியாரே! நான் சோழநாட்டில் வசிக்கிறேன். பல திருத்தலங்களுக்கும் சென்று வருகிறேன். மதுரையில் எம்பெருமானையும் தரிசிக்க எண்ணியே இங்கு வந்தேன். இங்கே யாருமே இல்லாததைக் கண்டு விசாரித்தேன். சமணத்தை மக்கள் பின்பற்றுவதால் யாருமே வருவதில்லை என அறிந்து வருத்தமடைந்தேன். இருப்பினும், மீண்டும் சைவத்தைக் கொண்டு வர ஒரு மார்க்கம் உள்ளது. சொல்லட்டுமா, என்றார்.கரும்பு தின்ன கூலியா? சொல்லுங்கள் அந்தணரே! என்றாள் அரசி.
சீர்காழியில் ஞானசம்பந்தன் என்னும் தெய்வமகன் இருக்கிறார். மூன்று வயதில் உமையம்மையிடமே பால் குடித்த குழந்தை அவர். அவரை இங்கு வரவழைத்தால் சைவம் தழைக்க வகை செய்வார், என்றார். உடனே ஓலை எழுதிய ராணி, அந்தணரே! தாங்கள் இதை ஞானசம்பந்தரிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள். அவரை மதுரைக்கு வரச்சொல்லுங்கள், என்றாள். திருமறைக்காடு என்னும் வேத ஆரண்யத்தில் (வேதாரண்யம்) அவர் இருப்பதைக் கேள்விப்பட்ட அந்தணர் அங்கு சென்றார். அங்கே திருநாவுக்கரசரும் தங்கியிருந்தார். இருபெரும் சைவப்பழங்களைக் கண்ட அந்தணர் ஓலையை சம்பந்தரிடம் ஒப்படைத்து மதுரையின் நிலையை விளக்கினார். அதைப் படித்ததுமே அங்கு செல்ல முடிவெடுத்து விட்டார் சம்பந்தர். நாவுக்கரசர் அவரிடம், ஐயனே! சமணர்களைப் பற்றி தங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களால் பாதிக்கப் பட்ட எனக்கு அதுபற்றி நன்றாகவே தெரியும். மேலும், நாளும் கோளும் இப்போதைக்கு நன்மை தருவதாக இல்லை. நல்லநாள் பார்த்து கிளம்பலாமே! என்றார். சம்பந்தர் அவரிடம், திருநாவுக்கரசப் பெருமானே! ஐயனே! நாம் நமசிவாயத்தின் அடிமைகள். நமசிவாயம் இருக்க நாளும் கோளும் என்ன செய்து விடும், என்றவர், வேயுறுதோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி, என்று துவங்கி பாடல்களை வரிசையாக அடுக்கினார். இன்றும் கூட, நவக்கிரகங்களால் நமக்கு தொல்லை ஏற்படுமோ என்று அஞ்சுவோர் இந்தப் பதிகத்தைப் பாடி வருவதை நாம் அறிவோம். இதையடுத்து நாவுக்கரசர் ஏதும் சொல்லவில்லை. கிரகங்களை எல்லாம் சட்டை செய்யாமல் சம்பந்தர் கிளம்பி விட்டார். ஞனசம்பந்தர் மதுரை வந்ததும், மங்கையர்க்கரசியார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முடங்கிக் கிடந்த சைவர்களும் எழுந்தனர். மன்னனின் தடையை மீறி சம்பந்தர் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். முடங்கிக்கிடந்த சைவர்களுக்கு இந்தச் செயல் புத்துணர்வை அளித்தது. மதுரையில் வாகீசமுனிவர் என்பவர் தங்கியிருந்தார். அவர் சம்பந்தரை தனது திருமாளிகைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.
கோபமடைந்த சமணர்கள் அந்த மாளிகைக்கு தீ வைத்து சம்பந்தரைக் கொன்று விட தீர்மானித்தனர். அவர்கள் ஒரு ஹோமம் நடத்தி அக்னி தேவனை வரவழைத்து மாளிகையை அழிக்கச் சொன்னார்கள். தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட சம்பந்தர் கொதித்து விட்டார். மாளிகைக்குள் சிக்கிக் கொண்ட அவரை வெப்பம் வாட்டியது. இளம் தளிராயிற்றே அவர்! அந்த வேதனையைப் பொறுத்துக் கொண்டு செய்யனே திருஆலவாய் மேவிய எனத்துவங்கி ஒரு பதிகம் (11 பாடல்கள்) பாடினார். பாடலின் கடைசி வரியாக, இந்த துன்பம் தனக்கு ஏற்பட காரணமானவன் பாண்டியன் என்பதால், இந்தத் தீ அவனையே சாரட்டும் என்றரீதியில் கடைசி வரியை முடித்தார். அவர் பாடி முடித்தாரோ இல்லையோ... பஞ்சணையில் சந்தனம் பூசி குளுகுளுவென்ற தென்றலில் படுத்திருந்த பாண்டியன் உடலில் வெப்பம் பற்றிக் கொண்டது. அவன் அலறினான். கடும் ஜுரம் அடித்தது. வைத்தியர்கள் வந்தார்கள். பல மருந்துககைளக் கொடுத்தார்கள். அவனது வெப்பத்தைத் தணிக்க மயில்தோகையால் வருடினார்கள். எதற்கும் பலனில்லை. சமணர்களோ தங்களது மந்திரங்களை எல்லாம் பிரயோகித்துப் பார்த்தார்கள். முடியவில்லை. மதுரை வந்திருக்கும் சம்பந்தரை அழைத்து வந்து வைத்தியம் செய்தால் நோய் குணமாகும் என மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் மன்னனிடம் சொல்ல, நோயின் கொடுமை தாங்க முடியாத அவன் அதற்கு சம்மதித்தான். சம்பந்தர் வந்தார். இதைக் கேள்விப் பட்ட சமணர்களும் வந்தனர். மன்னரே! இந்த சம்பந்தரால் உங்கள் நோயைக் குணப்படுத்த முடியாது. இதோ! ஐந்து நிமிடத்தில் குணமாக்குகிறோம், என்று சொல்லி ஏதோ வைத்தியம் செய்ய, அது மன்னனின் வேதனையை அதிகமாக்கி விட்டது. போதாக் குறைக்கு அந்த வெப்பம் அருகில் இருந்த சமணர்களையும் தாக்கியது. அவர்கள் ஒதுங்கி நின்றனர். மன்னன் கத்தினான். சமணர்களே! ஒதுங்கி நில்லுங்கள். சம்பந்தரே எனக்கு வைத்தியம் பார்க்கட்டும், என்றான். சம்பந்தர் உடனே திருநீறை கையில் எடுக்க,அரசே! இந்தச் சிறுவன் உங்களை மயக்கப் பார்க்கிறான். இந்த திருநீறைக் கையில் எடுக்க விடாதீர்கள், என்றனர். மன்னன் என்ன செய்வதென தெரியாமல் விழிக்க, சம்பந்தர் வேறு ஏதும் வேண்டாம். கோயில் மடைப்பள்ளி சாம்பலைக் கொண்டு வாருங்கள், என்றார். சாம்பல் வந்தது. அதை மன்னனின் உடலில் தேய்த்ததுமே வெப்பம் குறைந்து விட்டது. மன்னன் சம்பந்தரைப் பாராட்டியதுடன், சிவாயநம என்னும் மந்திரத்தையும் அவர் உபதேசிக்கக் கேட்டு, அதை ஏற்று மீண்டும் சைவன் ஆனான். நெடுமாற பாண்டியன் கூன் உடம்பு கொண்டவன். சம்பந்தரின் அருள் மழையால் அவனது கூனும் நிமிர்ந்து விட்டது. மன்னன் அவருடன் கோயிலுக்குச் சென்றான். மக்கள் ஆரவாரம் செய்து அவர்களை வரவேற்றனர்.
திருமணத்தில் இனிப்புகளை சீர் பலகாரமாகக் கொடுப்பதற்கான காரணம்.

திருமண வைபவத்தில் மணமகள் சார்பில் லட்டு, பூந்தி போன்ற இனிப்புகளை சீர் பலகாரமாகக் கொடுப்பர். அவரவர் வசதிக்கேற்ப லட்டின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். இப்படி கொடுப்பது ஏன் தெரியுமா? இனிப்பு வகைகளில் லட்சுமிக்கு விருப்பம் அதிகம். அவளின் அருளால் மண வாழ்வு சிறக்கவும், மாப்பிள்ளை வீட்டாருக்கு லட்டு போல புதிய உறவு என்றும் இனிக்கவும் கொடுக்கிறார்கள்.
                                                                         உப்பு



சாதாரண நிகழ்வுகளை உப்பு பெறாத விஷயம் என்று சாதாரணமாகச் சொல்வார்கள். உண்மையில் உப்பின் தன்மை உயர்ந்தது. கடலில் பிறந்தவள் லட்சுமி. எனவே, அதில் கிடைக்கும் உப்பு, லட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. உணவுக்கு ருசி சேர்ப்பது போல, உறவுக்கும் பாலமாக இருக்கிறது. இதனால் கிரகப்பிரவேசத்தின் போது, உறவினர்கள் உப்பு கொண்டு வருகின்றனர். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொல்வதும் இதனால் தான். உப்பைக் கடனாக வாங்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். வீட்டில் உப்பு இல்லாமல் ஒரு போதும் இருக்கக்கூடாது. உப்பு வீணானால் செலவு உண்டாகும் என்பர். கோயில் குளத்தில் உப்பும், மிளகும் இட்டால் ஆரோக்கியமான உடல்நிலை அமையும்
                                                                         108ன் சிறப்பு

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.
* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
                                              இனிய வாழ்விற்கு அடிப்படை


கடவுள் சந்நிதிக்குள் நுழைந்தாலே போதும், ஏம்ப்பா! பக்கத்து வீட்டு பரமசிவம் கோடி கோடியா வச்சிருக்கான். நான் அவ்வளவாடா உன்கிட்டே கேட்கிறேன். ஏதோ அஞ்சு லட்சம் பத்து லட்சம் கேக்கிறேன். தரமாட்டாங்கிறியே! அவன் காரிலே போறான், எனக்கு ஒரு பைக் தரக்கூடாதா! ஏ முருகா! கண்ணைத் தொறந்து பாருடா, என்று கதறுபவர்கள் பலர்!
ஒருத்தன் இப்படித்தான் கடவுளைப் பாடாய் படுத்தினான். ஒருநாள், கடவுளே அவன் முன்னால் வந்து விட்டார். என்னப்பா வேணும்னார். வேறென்ன கேக்கப்போறேன்! ஒரு முப்பது லட்சம், தங்க நகை, வைர வைடுரியங்கள் வேணும்னான். அவர் மூன்று தேங்காயைக் கொடுத்தார். என்ன சொல்லி உடைக்கிறாயோ, அது இதில் இருந்து வரும், என்றார். அவன் முப்பது லட்சம் வரட்டும் என்று சொல்ல வாயெடுத்த வேளையில், அவன் மனைவி வந்து என்னங்க! டீ போடட்டுமா! என்றாள். ஆங்...முக்கியமான வேலையா இருக்கேன்லே! உன் தலையிலே இடிவிழ என்றான். திடீரென மேகக்கூட்டம்...இடி இடித்தது. அவன் மனைவி தலையில் விழுந்து விட்டது. ஐயோ இறைவா! விளையாட்டா சொன்னது வினையாப் போச்சே! அவளுக்கு உயிர் பெற்று எழட்டும், என்று சொல்லியபடியே இன்னொரு தேங்காயை உடைத்தான். அவள் எழுந்தாள். ஆனால், இடி விழுந்ததில் முகம் விகாரமாகி விட்டது. இவளோடு எப்படி குடுத்தனம் நடத்துறது! பழைய முகம் திரும்பி வரட்டும், என்றான். அவளுக்கு முந்தைய முகம் கிடைத்தது. ஆக, முப்பது லட்சம் போச்சு! ஒருவருக்கு என்ன கிடைக்கிற வேண்டுமென இருக்கிறதோ, அதுதான் கிடைக்கும். கடவுள் கொடுத்திருக்கிற சவுகரியத்தோட வாழ கத்துக்கணும். அதுவே இனிய வாழ்வை தரும்.
                                                        ஏகாந்த சிந்தனை



தேவையின் பொருட்டு கடவுளை துதிப்போருக்கும், பக்தி செலுத்துவோருக்கும் கடவுள் ஒரு நாளும் காட்சி அளிப்பதில்லை. எவன் ஒருவன் களங்கமற்ற மனதுடன், இறைவன் குறித்து ஏகாந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறானோ, அவன் வழிமுறைகள் தவறு என்றாலும், அவனுக்கு, ஜோதிமயமான இறைவன் அவன் வேண்டிய உருவில் காட்சி தந்து அருளுகிறார். இதற்கு உதாரணமாக, சோழநாட்டைச் சேர்ந்த சனந்தனரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளலாம்.
தன் இள வயதிலேயே நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றவர் சனந்தனர். இவர் ஒரு முறை, காட்டில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது, வேடன் ஒருவன் சனந்தனரைப் பார்த்து, ’சாமி... இந்த காட்டுல கண்ண மூடி உட்கார்ந்துட்டு என்ன செய்றீங்க?’ எனக் கேட்டான். அவன் குரல் கேட்டு கண்விழித்த சனந்தனர், ’இந்த வேடனுக்கு நரசிம்மரை பற்றியும், அவருடைய உபாசனை குறித்தும் எப்படி சொல்லி புரிய வைப்பது...’ என நினைத்து,’வேடனே... நீ காட்டில் விலங்குகளை தேடுகிறாய் அல்லவா... அதுபோல, நானும் ஒரு விசித்திரமான விலங்கை கண்களை மூடியபடி, தேடிக் கொண்டிருக்கிறேன்...’ என்று கூறி, நரசிம்ம உருவத்தை விவரித்தார். அதைக்கேட்ட வேடன் வியந்து, ’பாதி சிங்கம்; பாதி மனித வடிவில் ஒரு உருவமா... ஆச்சரியமாக இருக்கே... இருந்தாலும், நீங்க கவலைப்படாதீர்கள். நாளை சூரியன் மறைவதற்குள் நீங்கள் சொன்ன அந்த விலங்கை கட்டி, இழுத்து வருவேன்; அப்படி கொண்டு வராவிட்டால், நெருப்பில் விழுந்து இறப்பேன்; இது சத்தியம்...’ என்று கூறி, புறப்பட்டான்.
மறுநாள் பொழுது விடிந்ததும், நரசிம்மத்தை தேடி, காடெங்கும் அலைந்தான் வேடன். அவன் சிந்தனை முழுவதும் நரசிம்மர் நினைவிலேயே இருந்தது; தண்ணீர் கூட அருந்தாமல் தேடி அலைந்தான். அந்தி சாயும் நேரம் நெருங்கியது, வேடன் மனம் உடைந்து போனான். ’அந்த நல்ல மனிதருக்கு, அவர் தேடும் விலங்கை கொண்டு வருவதாக வாக்கு கொடுத்தேனே... அதை நிறைவேற்றாத நான், இனிமேல் உயிருடன் இருக்கக் கூடாது...’ என்று நினைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான். அப்போது, காடே அதிரும்படியாக ஒரு கர்ஜனை கேட்டது. வேடன் திரும்பிப் பார்த்தான்; அங்கே, நரசிம்மர் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும், வேடனுக்கு கோபம் தாங்கவில்லை. காட்டு கொடிகளை நரசிம்மரின் கழுத்தில் கட்டி, ’தரதர’வென இழுத்து போய், சனந்தனரின் முன்னால் நிறுத்தி, ’சாமி, நீங்கள் தேடிய விலங்கை இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்...’ என்று கூறினான். சனந்தனருக்கு, நரசிம்மரின் கர்ஜனை கேட்டதே தவிர, உருவம் கண்ணுக்கு தெரியவில்லை. ’வேடனுக்கு கிடைத்த புண்ணியம் எனக்கு கிடைக்கவில்லையே...’ என்று அழுதார் சனந்தனர். அப்போது நரசிம்மர், ’சனந்தனா... இந்த வேடனுக்கு உள்ள ஏகாந்த சிந்தனை, ஒருமைப்பட்ட மனது உனக்கு ஏற்படவில்லை; அப்படி உனக்கு ஏற்படும் சமயத்தில் நான் உனக்கு அருள் புரிவேன்...’ என்று அசரீரியாக கூறினார். அந்த சனந்தனர் தான் பிற்காலத்தில் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவராகி, பத்மபாதர் என திருநாமம் பெற்றார். காபாலிகன் ஒருவன் ஆதிசங்கரரை கொல்ல முயன்ற போது, சனந்தனரின் உடம்பில் நரசிம்மர் ஆவாகனமாகி, காபாலிகனை கொன்று, ஆதிசங்கரரை காப்பாற்றினார் என்பது வரலாறு.
                                                              
                                                        குலதெய்வம் !!

பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.
சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.
குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.
                                                  சிவ புராணம்!!



பன்னிரண்டு திருமுறைகள்-
தேவாரம், திருவாசகம், திருமந்திரம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு,பெரியபுராணம்!
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 5
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
                    கஷ்டங்களை ஏன் கடவுளிடம் சொல்லவேண்டும்



நம் பாவத்துக்கு பலனாக கஷ்டங்கள் வருகின்றன. என் மனமறிந்து

 யாருக்கும் எந்தக் கேடும் செய்யவில்லையே, அப்படியிருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்? என்றால், முற்பிறவியில் செய்ததன் பலனை அனுபவிப்பீர்கள். அப்படியானால் கஷ்டம் நிஜம் என்று ஆனபிறகு, கடவுளை வணங்குவானேன்! அதை அனுபவித்து விட்டு போய்விடுவோமே என்றால், கஷ்டத்தை தாங்கும் சக்தியில்லை. இந்த சமயத்தில் நாம் கடவுளை துணைக்கு அழைக்கலாம். எப்படி தெரியுமா? நீலகண்டதீட்சிதர், அன்னை மீனாட்சியை துணைக்கு அழைத்த மாதிரி! ஆனந்த ஸாகர ஸ்தவம் என்ற தனது நூலில், அவர், அம்மா மீனாட்சி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும், உன்னிடம் கஷ்டங்களை வாய்விட்டு சொல்லாவிட்டால், மனம் புண்ணாகிறது. வாய்விட்டுச் சொல்வது ஆறுதல் தருகிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன், என்கிறார். நாமும், நம் கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிட்டு மனதில் இருக்கும் பாரத்தைக் குறைப்போம். மனச்சாந்தி பெறுவோம்.
              தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பது ஏன்?


சிவன் வீற்றிருக்கும் கைலாய மலை வடக்கில் இருக்கிறது. இறந்த உயிர்கள் சென்றடையும் பிதுர்லோகம் தெற்கில் இருக்கிறது. வடக்கு நோக்கி செல்வதைச் சரண யாத்திரை, தெற்கு நோக்கி செல்வதை மரண யாத்திரை என்பர். உயிர்களைத்தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அழைக்கும் விதமாக தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
                                         உழவாரப்பணி செய்வது ஏன்


திருநாவுக்கரசர் கையில் உழவாரப்படை என்னும் கருவி இருக்கும். இதன் மூலம் அவர் கோயில்களில் உள்ள புற்கள், தேவையற்ற செடிகளைச் செதுக்கி சுத்தம் செய்வார். ஒருமுறை, சுத்தம் செய்யும் போது, கோயில் பிரகாரத்தில் தங்க நாணயங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தார். அதையும் கு ப்பையாகக் கருதி ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டார். பொன்னையும் துச்சமாகக் கருதிய அவர் முன், சிவன் தோன்றி அருள் புரிந்தார். இவரைப் போல், எதிர்பார்ப்பு இல்லாமல் கோயில் பணி சேவை செய்வோருக்கு கடவுளின் கருணை கிடைக்கும்.
                                             அரோகரா என்பது ஏன்



சிவநாமமான ‘ஹர ஹர’ என்பதையே ‘அரோகரோ! வேல் முருகனுக்கு அரோகரா!’ என்று சொல்கிறார்கள். ஏன் தெரியுமா? சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். சிவன் நெற்றிக் கண்ணில் ஆறு தீப்பொறிகளை வெளியிட, அவை சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளானது. அவர்களைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதிதேவி ஒரே உருவமாக்கி ‘கந்தன்’ என்று பெயரிட்டாள். தன் சக்தியை ஒன்று திரட்டி வேலாகக் கொடுத்தாள். வேலினால் கந்தன் சூரனை வதம் செய்தார். இதனால் முருகன் ‘அறுமுகச் சிவனார்’ எனப் போற்றப்பட்டார். முருகனுக்கும், ‘ஹர ஹர’ (சிவனே சிவனே) என்ற பதம் உண்டாயிற்று. இதுவே திரிந்து ‘அரோகரா’ ஆயிற்று.
                                     குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?



1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது. 
                                          இது மாதிரி மனசிருந்தா மழை கொட்டும்!


காமதம் என்ற வனப் பகுதியில் அத்திரி முனிவரும், அவரது மனைவி அனுசூயாவும் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தனர். பல முனிவர்களும் அங்கிருந்தனர். ஐந்தாண்டுகள் மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. அங்கிருந்த முனிவர்கள் வேறு இடங்களுக்கு புறப்பட்டனர். ஆனால், அனுசூயா இதை பொருட்படுத்தாமல், கணவருக்கு பணிவிடை செய்து வந்தாள். அவள் முன் தோன்றிய கங்காதேவி,அம்மா அனுசூயா! மற்றவர்கள் வறட்சிக்கு பயந்து கிளம்பிய நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் கணவனுக்கு சேவை செய்தது கண்ட சிவன், என்னை அனுப்பினார். வேண்டும் வரம் கேள், என்றாள்.தாயே! வறண்ட வனத்தை வளமாக்கு, என்றாள்.அப்படியே ஆகட்டும் என்ற கங்கை, அனுசூயாவிடம், எல்லோரும் என்னில் நீராடுவதால், அவர்கள் செய்த பாவமெல்லாம் எனக்குள் கரைந்து கிடக்கிறது. உன் போன்ற பதிவிரதை மனம் வைத்தால் நான் சுத்தமாகி விடுவேன், என்றாள். சற்று கூட தயக்கமின்றி, அனுசூயா கணவருக்கு சேவை செய்த புண்ணியத்தை தர சம்மதித்தாள். அப்போது சிவன் தேவியோடு காட்சி தந்து, புண்ணியத்தையே தானம் செய்த புண்ணியவதி நீயம்மா என வாழ்த்தினார். அங்கு நீர் வளம் பெருகியது.
                                                                       சூர்ப்பனகை


ராமாயணக் கதைக்கு முக்கிய காரணமானவளே சூர்ப்பனகை. அவள் தான், சீதையின் அழகு பற்றி தன் அண்ணன் ராவணனிடம் கூறி அவனை உசுப்பேற்றியவள். முற்பிறப்பில் இவள் ஆனந்த குருஎன்பவளுக்கு மகளாகப் பிறந்தாள். அப்போது அவளது பெயர் சுமுகி. ஆனந்தகுருவிடம், சத்தியவிரதன் என்ற மன்னனின்மகனான சங்கசூடணன் என்பவன் பாடம் படித்தான். சங்கசூடணனை சுமுகிஒருதலைப்பட்சமாகக்காதலித்தாள்.ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு சங்கசூடணன் சென்றான். குரு வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை சங்கசூடணனிடம் வெளிப்படுத்தினாள். பெண்ணே! குரு துரோகம் பொல்லாதது. குருவின் மகளான உன்னை என் தங்கையாகவே நினைக்கிறேன், என சொல்லிவிட்டு போய்விட்டான். ஏமாற்றமடைந்த சுமுகி, தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை சங்கசூடணன் கெடுத்து விட்டதாக பழி போட்டு விட்டாள். இதை நம்பிய குரு, மன்னனிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மன்னனும் அதை நம்பி, தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான். சங்கசூடணன் பூமியில் விழுந்து, தர்மம் அழிந்து விட்டதா? எனக் கதறினான். உடனே பூமி பிளந்தது. உள்ளிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டான். சங்கசூடா! இப்பிறப்பில் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சுமுகியை மறுபிறப்பில் நானே பழிவாங்குவேன், என்றான். சங்கசூடணன் மறுபிறப்பில் ராவணனின் தம்பியாக (விபீஷணன்) பிறந்தான். அவனது தங்கையாக சுமுகி பிறந்தாள். அவளே சூர்ப்பனகை எனப் பெயர் பெற்றாள். ஆதிசேஷன் லட்சுமணனாகப் பிறந்து அவளது மூக்கை அறுத்தான். பாவம் செய்தவன் தண்டனை அனுபவித்தே தீருவான்.
                                          ஆலயம் தொழுவது சாலவும் நன்று!!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார் ஒளவையார். ஆலயம் என்பது ஆ+லயம் எனப் பிரிக்கலாம். ஆ என்பதற்கு ஆன்மா என்று பொருள். லயம் என்பதற்கு லயமாவதற்கு அல்லது சேருவதற்குரிய இடம் என்பது பொருள். ஆகவே கடவுள் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கூறலாம். ஆ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கி இருத்தலையும் குறிக்கும். அதனால் ஆலயம் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் எனவும் கூறுவர், இதனை கோயில் எனவும் கூறுவர் கோ-கடவுள் இல் தங்குமிடம். கோயில்-கடவுள் தங்குமிடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவேதான் ஆலய வழிபாடு என்பது இறைவழிபாடு என்று பொருள்படும். அது பற்றியே மெய்கண்ட தேவநாயனாரும். ஆலயந்தானும் அரனெனத் தொழுமே என்றருளினார். எங்கும் நீக்கமற்ற நிறைந்துள்ள இறைவனை ஆலயங்களில் மட்டும் ஏன் வழிபட வேண்டும் எனச் சிலர் கருதுவர். இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இறையருள் எல்லா இடங்களிலும் விளங்கித் தோன்றுவதில்லை.
பால் முழுவதும் நெய் கலந்துள்ளது. எனினும் தயிரிலிருந்தே விளங்கித் தோன்றும். பூமியின் அடியில் எங்கும் தண்ணீர் வியாபித்திருந்தாலும், நாம் அதை உபயோகப்படுத்த வேண்டுமானால் ஒரு கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு போன்றவற்றின் மூலம்தான் பயன்படுத்த முடிகிறது. இவற்றைப்போல் கடவுள் எங்கும் நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் சிறப்பாக நின்று அருள் செய்கின்றார். பசுவின் உடம்பெல்லாம் பால் வியாபித்திருந்தாலும் அது அகடுகளின் (மடி) வழியாகவே நமக்குக் கிடைக்கிறது. அதுபோல் இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும் ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் வழியாகவே அருளைச் சுருக்கிறான்.
ஆலயம் மனிதவடிவம்
கோயில்கள் நமது உடம்பின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை சேஷத்திரம் சரீரப்பிரஸ்தாரம் என்பர். ஆலயம் மனிதர் உடம்புபோல் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் பொருள். இதனை திருமூலரின் பின்வரும் பாடல் மூலம் உணரலாம்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!
இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், (மந்திரம், பாவனை கிரியைகளால்) அவனருள் ஆலயத்தில் விளங்கித் தோன்றும். சிவஞான யோகிகளும், மாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவம் ஆயவேல் அவை அருள் மயமாகும்? என்றருளினார். எனவே ஆலய வழிபாடு மிக அவசியம் என்பது உணரப்படும்.
ஆலய அமைப்பும் எல்லா இடங்களிலும் ஒரே முறையாக இருந்து வருகின்றது. பொதுவாக எல்லா சிவாலங்களிலும் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நீராட்டு மண்டபம், தம்ப மண்டபம், நிருத்த மண்டபம் முதலியனவும்; ஐந்து அல்லது மூன்று பிராகாரங்களும், கோபுரமும், யாகசாலை, நந்தி, பலிபீடம், கொடிமரம் முதலியவையும் முக்கியமாகக் காணப்படுவனவாகும். இவ்வமைப்பு உடலமைப்பை ஒட்டியது என்பர் ஆன்றோர். தேகமாகிய ஆலயத்துள்ளும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு ஆதாரங்களும் அறியப்படும். இவ்வுடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்று ஐந்து கோசங்கள் உள்ளன. (கோசம்-சட்டை). கோயிலிலுள்ள ஐந்து பிராகாரங்களும் இவற்றைக் குறிக்கின்றன. அன்னமய கோசம் முதலியவற்றைத் தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரணச் சரீரம் என அறிக.
1. சிவாலயக் கோபுரம் (இது தூலலிங்கம் எனப்படும்) 2. சிவாலயத்தின் வாயில். 3. பலிபீடம்(இது பத்ரலிங்கம் எனப்படும்)4. பிராகாரம். 5.கர்ப்பக்கிருக விமானம்(இது தூயலிங்கம் எனப்படும்) 6. அர்ச்சகர். 7. சிவலிங்கப் பெருமான்(சதாசிவ மூர்த்தி என்றும், பார்த்தலிங்கம் என்றும் கூறப்படும்).
ஆலய தரிசனம் செய்ய விரும்புவோர் நீராடி, தோய்த்துவந்த உடைகளை அணிந்து செல்லவேண்டும். ஆலயத்தை நெருங்கியதும் கால்களைக் கழுவிக் கொண்டு பின் தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தை தரிசித்து. இரண்டு கைகளையும் தலைக்குமேலே குவித்த வண்ணம் சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே செல்லவேண்டும். உள்ளே சென்றதும். பலிபீடத்தையும் கொடிமரத்தையும். இடபதேவரையும் வணங்கவேண்டும். பின் பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும்(கிழக்கு, மேற்கு நோக்கிய சன்னிதகளாயின் வடக்கே தலைவைத்தும், தெற்கு, வடக்கு நோக்கிய சன்னிதிகளாயின் கிழக்கே தலைவைத்தும் வணங்கவேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால்நீட்டி வணங்கக்கூடாது) ஆண்கள் எட்டுறுப்புகளும், பெண்கள் ஐந்துறுப்புகளும் நிலத்தில் தோய வணங்கவேண்டும். (தலை, கையிரண்டு, செவி இரண்டு, மேவாய், புயங்கள் இரண்டு என்பன எட்டுறுப்புகள். தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என்பன ஐந்துறுப்புகள்.)
பின்னர், தலையிலேனும் மார்பிலேனும் கைகளைக் குவித்துக்கொண்டு, குறைந்தது மூன்று முறை பிராகாரத்தை மெதுவாக வலம் வர வேண்டும். (கைகளைத் தொங்கவிட்டுக் கொண்டோ, கட்டிக்கொண்டோ வலம் வரக்கூடாது) மீண்டும் பலிபீடத்திற்கு இப்பால் விழுந்து வணங்கவேண்டும். (இந்த இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் குற்றமாகும்) பின்பு துவார பாலகர்களை வணங்கி உள்ளே சென்று கணநாத ராகிய திருநந்திதேவரை வணங்கி, பகவானே, உம் திருவடிகளை அடைந்து அடியேன் உள்ளே சென்று சிவபெருமானை தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அனுமதி செய்தருளும் என வேண்டிக் கொண்டு உள்ளே செல்லவேண்டும்.
உள்ளே சென்றதும் விக்னேசுவரனை வணங்க வேண்டும். (இரண்டு கைகளையும் முட்டியாகப் பிடித்து நெற்றியில் மூன்றுமுறை குட்டி, வலச்செவியை இடக்கையினாலும், இடச் செவியை வலக்கையினாலும் பிடித்து மூன்று முறை தாழ்ந்து எழுவேண்டும்) பின்னர் சிவலிங்கப் பெருமான் சன்னிதியை அடைந்து வணங்கியபின்., உமாதேவியார் சன்னிதி அடைந்து வணங்கி விபூதி, குங்குமம் வாங்கித் தரித்துக் கொள்ளவேண்டும். பின்பு சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திசேகரர், சுப்பிரமணியர்யும், சமயக்குரவர் நால்வரையும் தரிசனம் செய்தல் வேண்டும், பின்னர் உள்பிராகாரத்தில் வலம்வந்து, சண்டீசர் சன்னிதி அடைந்து தாளத்திரயம் செய்து சிவதரிசன பலத்தைத் தரும்படிப் பிரார்த்திக்க வேண்டும். (தாளத்திரயம் என்பது மெல்லிய ஒலி எழும்படி வலது கை விரல்கள் இடது உள்ளங்கையில் மூன்று முறை தட்டுதல். பின் வலமாக வந்து இடபதேவரை வணங்கி, அங்கிருந்தே சிவலிங்கப் பெருமானை தரிசித்து பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும், பின்பு ஓரிடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து சிவமந்திரத்தை செபித்துப் பின் எழுந்து வீட்டிற்குச் செல்லவேண்டும். சிவாலயத்திற்குச் செல்வோர் தங்கள் தகுதிக்கேற்ப பழம் முதலியன கொண்டு சென்று அர்ச்சிப்பித்து விபூதி பிரசாதம் பெறவேண்டும். ஒன்றும் இயலாதவர் சன்னிதியில் கிடக்கும் குப்பை முதலியவற்றை நீக்குதல் அலகிடுதல், கோலமிடுதல் முதலிய தொண்டுகள் செய்யவேண்டும். தினந்தோறும் ஆலய தரிசனஞ்செய்ய இயலாதவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, திருவாதிரை, சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி முதலிய புண்ணிய காலங்களில் தரிசனம் செய்தல் வேண்டும்.
                                                                          சிவன்
சிவன் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெரும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் , இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தேற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவனையும் அழித்து தன்னுள் ஒடுக்கி சிவன் மட்டும் நிலையாக இருப்பதாக சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.
இவரை வழிபடும் வழக்கம் வரலாற்றுக்கு முற்பட்டதெனவும், சிந்து மொகெஞ்சதாரோ நாகரீங்களில் இவரை வழிபாடு செய்தமைக்கான அடையளங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் தமிழர்களின் ஐந்தினை தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது.
இவர் நடனம், யோகம் என கலைகளில் சிறந்து விளங்குபவராகவும், உமையம்மையுடன் கையிலை மலையில் வசிப்பதாகவும் சைவர்களாலும், இந்துக்களாலும் நம்பப்படுகிறது. உமையம்மை தட்சனின் புதல்வி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்து சிவனை மணந்து, பின் தட்சனின் யாகத்தில் விழுந்து இறந்ததாகவும், பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்து சிவனை மணந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமான் பார்வதி தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற குழந்தைகளும் உள்ளனர். அத்துடன் சிவபெருமான் தட்சனை அழிக்க தோற்றுவித்த வீரபத்திரனும், திருமால் மோகினியாக அவதாரம் எடுத்த போது பிறந்த ஐயப்பனும் சிவ குழந்தைகளாக கருதப்படுகிறார்கள்.
* அடையாளங்கள்
சிவபெருமான் ஞானக்கண் என்று கூறப்படும் நெற்றிக்கண்ணை உடையவர், அவருடைய ஆயுதமாக திரிசூலம் உள்ளது. அதனுடன் இசைக்கருவியான உடுக்கை (டம்டம்) இணைந்துள்ளது. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர். மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார்.
தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்க சிவபெருமான் திகம்பர மூர்த்தியாக சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். அடுத்து யானையை அனுப்பினர், அதன் தோலினையும் உரித்திக் கொண்டார். கொலையாயுதமான மழுவினை எய்தனர், அதனை தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாக சிவபெருமான் இணைத்துக் கொண்டார். சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார். பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோலை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார்.
காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றை சிவபெருமான் ஆபரணங்களாக தரித்துக் கொண்டார். பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு)வாசுகி பாம்பினால் கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர் என்பனவெல்லாம் சிவபெருமானின் அடையாளங்களாக கூறப்படுகிறது.
* குணநலன்கள்
சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும், கையிலையிலும், மயானத்திலும் வசிப்பவராகவும், அரக்கர்கள் தேவர்கள் என தன்னை நினைத்து தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களை கொடுப்பவராகவும், பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் கூறப்படுகிறார்.
தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார். என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.
* வழிபாடு
சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை
*) காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
*) நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
*) மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
*) அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
* சிவனின் ஐந்து முகங்கள்
. சத்யோ சோதம்
. வாமதேவம்
. அகோரம்
. தற்புருடம்
. ஈசானம் இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.
பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
* சிவ அவதாரங்கள்
சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், சிவபெருமான் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்மபுராணம் கூறுகிறது. அவையாவன, ஸ்வேதா, சுதாரா, மதனன், சுஹோத்திரன், கங்கணன், லோகாக்ஷி, ஜெய் கிஷ்ஹவ்யன், தாதிவாகன், ரிஷபன், பிருகு, உக்கிரன், அத்திரி, கவுதமன், வேதசீர்ஷன், கோகர்ணன், ஷிகந்தகன், ஜடமாலி, அட்டஹாசன், தாருகன், லங்காலி, மகாயாமன், முனி, ஷுலி, பிண்ட முனீச்வரன், ஸஹிஷ்ணு, ஸோமசர்மா, நகுலீஸ்வரன் என்பனவாகும்.
இவற்றில் நகுலீஸ்வரன் என்பவர் பாசுபத சைவத்தின் ஒரு பிரிவான நகுலீச பாசுபதத்தினை உருவாக்கியவர் ஆவார்.
                                ஆன்மீகமும் அறிவியலும் ,,,,,,,அலசலும் புலம்பலும் ,,,



நேற்று வரை வேற்று கிரகவாசிகள் பற்றிய கருத்துக்கள் ,ஆயுத முனையில் அடக்கி ஆளும் அரசுகளின் கட்டுகதை என்றே நம்பிக்கொண்டு இருந்தேன் .லெமூரியா ,//குமரிகண்டம்// ,அத்லாண்டில் என்று இரு பழம்பெரும் கண்டங்கள் இருந்ததாக பலர் கருத்துகூறியும் ,அவற்றை ஆய்வு செய்வதற்கு உலக அரசுகள் வெளிப்படையாக முதன்மை கொடுக்காமல் இரகசிய ஆய்வுகளை செய்வதையும் எண்ணி பார்த்தேன் .எதிரும் புதிரும் புதுமையும் நிறைந்த புராண இதிகாசங்களையும் வெறும் கற்பனை என்று பல முறை வாதிட்ட எனது மனநிலையையும் புதிய பாதையில் சிந்திக்க தூண்டி பார்த்தேன் .
கடந்த மூன்று ஆண்டுகளாக வேற்று கிரக வாசிகள் கனடாவின் பகுதிகள் ,இங்கிலாந்தின் பகுதிகள் ,சில ஆசிய நாடுகளின் பகுதிகளுக்கு வந்து போனதாக பல முறைப்பாடுகள் பலரால் எழுப்பபட்டது .இவை ஆதாரம் அற்றவை என்று பலர் கருத்து கூறி மறுத்து இருக்கின்றார்கள்.நானும் வேற்று கிரக வாசிகளின் பறக்கும் தட்டு பற்றிய ஒரு கவிதையில் உலகை ஏமாற்றும் அமெரிக்காவின் விஞ்ஞானத்தில் விளைந்த பட்டம் என்று கூறி இருந்தேன் .அதேவேளை விண்ணுக்கும் மண்ணுக்கு நாதனாக நாம் வணங்கும் விநாயகன் பற்றிய சில பதிவுகளில் விநாயகன் விண்வெளி வீரன் என்ற கருத்தை சில சந்தர்பங்களில் முன்வைத்து இருந்தேன் .அதற்கு ஆதாரமாக புராணகதைகளில் வரும் விநாயகர் வானத்தில் இருந்து பறந்து வந்தவர் என்பதற்கு பல புராண சான்றுகளை முன்வைத்து இருந்தேன் .
வேற்று கிரகவாசிகள் உருவத்தில் எம்மை போல் இருக்கமாட்டார்கள் அவர்கள் எம்மை விட அதீத வளர்சி அடைந்த மனிதர்கள் .அவர்கள் ஒரு சிலரின் வரவால் தான் பூமியில் மனித குலம் தோன்றி இருக்கலாம் என்றவகையில் ஆராய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை நகர்த்துகின்றார்கள் .இதற்கு வலு சேர்க்கும் வகையில் அவதார் போன்ற சில சினிமா படங்களையும் உலகில் சில நாடுகள் திரையிட்டு உள்ளது .முன்னொருகாலத்தில் எங்களை விட வளர்சி அடைந்ததும் மிக பெரிய உருவங்களை உடையதும் ஆன டைனோசர்கள் வாழ்ந்தது பற்றிய கருத்துக்களும் இருக்கின்றது .
சில ஆய்வாளர்கள் கருத்துப்படி வேற்றுகிரக வாசிகளின் வளர்சியோடு ஒப்பிடுகையில் இந்த பூமியில் வாழும் அமெரிக்க மனிதர்களில் இருந்து நாம் ஆதிவாசிகள் என்று அழைக்கும் காட்டு வாசிகள் வரை அனைவரும் எதற்கும் தேவையற்ற அற்ப பிறவிகள் என்பது அவர்களது கருத்து .நாம் வளர்சி அடையாத மனிதர்கள் என்பதால் அவர்கள் எம்மை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. எம்மில் சிலரை கடத்தி சென்று ஆய்வு செய்து அவர்கள் இவற்றை அறிந்து இருக்கலாம் என்று கூறுகின்றார்கள் .
முற்காலத்தில் நாம் இன்று வணங்கும் கடவுள்கள் அழகிய தேர்களில் வானத்தில் பவனி வந்தார்கள் என்று புராண கதைகளில் வருகின்றது .விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்துக்கு வேகமாக செல்லும் வல்லமை அவர்கள் பெற்று இருந்தார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றது .நாம் முதன் முதலில் விமானத்தை குபேரன் இராவணனுக்காக , மயன் தான் உருவாக்கினான் என்று வாதிடுகின்றோம்.அதையும் இன்றைய அமேரிக்கா மறுத்து ஒலிவர் ரைட் வில்வர் ரைட்டை அதற்கு உரிமை கோர வைக்கின்றது .
அப்படியாயின் அழகிய வான ஊர்திகளில் கடவுள்கள் ,தேவர்கள் பயணம் செய்தார்கள் என்று சொல்வது அதீத கற்பனையா ,,என் அப்படி கற்பனை செய்தார்கள் .அல்லது உண்மையில் அவ்வாறான அன்றைய நிகழ்வுகளை எம்மவர்களுக்கு சொல்லி சென்றார்களா ,,,அறிவியலை ஆன்மீகத்தோடு இணைத்து பார்த்தால் வரலாறுகள் அழியாமல் இருக்கும் என்று எம்முன்றோர்கள் கருதி இருப்பார்களா ,,,பின்வந்தவர்கள் மூட நம்பிகைகளை விதைத்து அறிவியலை அடைவு வைத்து அறுதியாக்கிவிட்டார்களா,,,சிவன் முதல் அன்றைய தேவர்கள் சாகா வரம் பெற்றவர்கள் என்ற தகவல் பல இடங்களில் வருகின்றது .நாம் இவர்கள் பிரபஞ்ச சக்தியை பெற்று நீண்டகாலம் வாழ்ந்தவர்கள் என்று கருதுகின்றோம் .மீன் பறவை ,காட்டு விலங்கு மனிதன் என உயிர்களுக்கு. உயிர் வாழ்நாள் காலங்கள் வித்தியாசப்படுகின்றது .அந்த வகையில் இன்றைய பனி விழும் தேசங்களில் வாழும் பல விலங்குகள் பல மாதங்கள் உணவு எதையும் உண்ணாமல் உறங்கியே காலத்தை கடந்து உயிர் வாழ்கின்றது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து நிரூபித்து அவற்றின் இரத்த அணுக்களை வேறு விலங்குகளுக்கு செலுத்தி ஆய்வு செய்கின்றார்கள் .எனவே நாமும் அன்றைய சித்தர்கள் ஞானிகள் உணவு உண்ணாமலே தியானத்தின் மூலம் பல ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று படிக்கின்றோம் .இன்றும் பல இடங்களில் மலை சாரல்களில் எம் கண் முன்னே சில சித்தர்கள் இவ்வாறு வாழ்கின்றார்கள் என்று பலர் இன்றும் சாட்சி கூறுகின்றார்கள் .அப்படியானால் மனிதனால் இறப்பை வென்று அல்லது பின்தள்ளி நீண்ட காலம் வாழ முடியுமா ,,,இது இந்த பூமியிலேயே சாத்தியம் என்ற நிலை இருக்கின்றதா ,,,,இங்கு சாத்தியம் இல்லாவிட்டாலும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கிரகங்கள் இருப்பதாக 1995 கண்டு பிடித்தார்கள் அதற்கு பின் பல நூறு நட்சத்திர தொகுதி இருப்பதாக கண்டு பிடித்தார்கள் .அங்கு மனிதர்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் .அவர்கள் யார் இறப்பை வென்ற மனிதர்களா ,,ஆய்வாளர்கள் கூறுவது போல எம்மைவிட பல ஆயிரம் மடங்கு அதீத வளர்சி அடைந்த மாந்தர்களா ,,,,என பல்வேறு கேள்விகள் வருகின்றது ,,,,,,இவற்றுக்கு விடைகள் எங்கு இருக்கிறது இல்லை இனிதான் கண்டு பிடிக்க போகின்றார்களா ,,,,,எழுதப்பட்ட குறிப்புகள் அழிந்துவிட்டது என்றாலும் கட்டப்பட்ட கட்டிடங்கள் சில இன்றும் இருக்கிறது .எம்முன்னோர்களின் கட்டிட கலை வளர்சியை ஒப்பீடு செய்து பாருங்கள் .மிகப்பெரிய பாரிய கட்டிடங்களை எவ்வாறு கட்டினார்கள் பல தொன் இடையுடைய கற்களை இன்றைய இலத்திரனியல் இயந்திரங்கள் இல்லாத அன்றைய காலத்தில் எவ்வாறு நகர்த்தினார்கள் .உலகில் கட்டப்பட்ட ஆதிகால கட்டிடங்களில் காலத்தால் முந்தியது என்று கருதி இன்னும் நாம் பார்க்க கூடிய வகையில் நிமிர்ந்து நிற்பது கிசாவின் பெரிய பிரமிடு இது கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புக்களில் அறியப்படும் ஆண்டு கி மு 2560 ,,அதாவது இன்றைக்கு 4573 ஆண்டுகளுக்கு முன்னம் ,இந்த பிரமிட் அண்ணளவாக 7 மில்லியன் தொன் இடை உடையதாகவும் 2.3 மில்லியன்//23இலட்சம் // கற்களால் பூமத்திய ரேகையின் மைய புள்ளியில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த பிரமிட்டை இன்றைய நவீன வசதிகள் இல்லை என்று நாம் கருதும் அந்த காலத்தில் எவ்வாறு கட்டி இருப்பார்கள் .பூமியின் மைய புள்ளியை எந்த கருவி கொண்டு அன்று சரியாக கணித்தார்கள் .உலகெங்கும் இதுபோன்றதும் சிறியதும் ஆக 200 பிரமிட்டுக்கள் கட்டி இருக்கின்றார்கள் .பிரமிட்டுக்கள் கட்ட பட்ட வரலாற்று குறிப்புக்களில் வானத்து தேவர்களின் உதவியோடு கட்டியதாக குறிப்பிட்டு உள்ளார்கள் .யார் அந்த வானத்து தேவர்கள்
தமிழ் அறிவியல் ஆளர்களின் கருத்துப்படி சில மேலைத்தேச ஆய்வாளர்களும் ஒப்புக்கொண்ட ஆய்வுகளின் படியும் மயன் இனத்தவர்களால் இந்த கட்டிடங்கள் கட்டபட்டு இருக்கலாம் என்று வலுவான கருத்துக்களை முன் வைக்கின்றார்கள் ,வரலாற்று பதிவுகளில் வரும் மூன்றாவது மிக பெரிய கடல் அழிவாக கருதப்படுவது இன்றைக்கு அண்ணளவாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளை கருதுகின்றார்கள் .இதை இந்தியர்கள் சிந்துவெளி கடல்கோள் என்று அழைகின்றார்கள்.இந்த காலத்தில் தான் மாயன் இனத்தவர்கள் எஞ்சிய குமரிக்கண்ட பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்தார்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள் .மேலை தேச ஆய்வாளர்கள் அத்லாந்திக் என்ற இன்னொரு கண்டம் இருந்ததாகவும் அதிலும் மாயன் இனத்தவர்களே வாழ்ந்தார்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள் .இன்றைய மத்திய அமெரிக்க மாயன் இனத்தவர்களின் கலண்டர் தொடங்கும் நாள் கி மு 3114 ஆவணி 11,என்றும் நமது இந்தியர்கள் கலியுகம் தொடங்கும் நாள் 3102 மாசி 17 என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள் இரண்டுக்கும் 12 வரிட குறுகிய இடைவெளியே இருக்கிறது .எனவே அவர்கள் இந்த காலத்தில் ஏற்பட்ட கடல் மற்றும் உள்நாட்டு அரசர்களின் போர் போன்ற காரணங்களால் வெளியேறி மாயன் இனத்தவர்கள் உலகெங்கும் பரந்து வாழ்ந்து இருக்கலாம் .ஆனால் அவர்கள் கட்டிட கலைகள் வான சாஸ்திர கருத்துக்கள் இலங்கை இந்தியாவிலும் எகிப்து போன்ற நாடுகளிலும் மெஸ்சிகோ போன்ற மத்திய மேரிக்க நாடுகளிலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே இருந்து இருக்கிறது .இதற்கு சான்றாக மெஸ்சிகோவில் உள்ள பிரமிட்டுகளும் கட்டிடங்களும் எகிப்தில் உள்ள பிரமிட்டுகளும் சான்று பகர்கின்றன இந்தியாவிலும் இவ்வாறான கட்டிடங்கள் இருந்து கடல் அழிவால் அழிந்து இருக்கலாம் .பிற்காலத்தில் எழுந்த கோவில்கள் சில ஒற்றுமைகளை கொண்டு இருக்கிறது
வேற்று கிரக வாசிகள் பற்றிய கருத்துக்கள் ஆய்வுகள் தொடர்கின்ற அதே வேளை அதே நேரத்தில் லெமூரியா ,அத்லாந்திக் ,கண்ட கடலில் மூழ்கிய நாடுகள் பற்றியும் துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு செய்தால் பல நூறு விடை காண முடியாத வினாக்களுக்கு விடை காணலாம் . அவற்றுக்குள் புதைந்து இருக்கும் உண்மைகளை பெளத்தறிவு ரீதியாக வெளி கொண்டு வர வேண்டும் .எம் மூதாதையர்கள் மூடர்கள் அல்ல எம்மை விட பல மடங்கு அறிவு படைத்தவர்கள் .இன்றைய ஐ போனில் உள்ள பல விடயங்கள் மாயனது குறிப்புக்களில் இருந்து பெறப்பட்டவை என்று ஒரு கட்டுரையில் வாசித்தேன் .இன்னொன்று உலகில் இன்று யார் பணக்காரர் என்பதில் மெஸ்சிகர்களுக்கும் இந்தியர்களுக்கும் பில்கேட்சுக்கும் தான் போட்டி அதனால் அவர்கள் வளர்சிக்கு அவர்கள் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களும் ஒன்றாகவும் இருக்கலாம் .
எம் மூதாதையான திருமூலர் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னம் அணுவை பற்றி அன்றே எழுதிவைத்தார் //அவரும் தனது மகனுக்கு மயன் என்று பெயர் வைத்தார் என்றும் ஒரு குறிப்பு சொல்கின்றது // திருமூலர் அணுவை பற்றி எழுதியதை மூலமாக வைத்து திருக்குறளிலும் வள்ளுவர் எழுதி வைத்தார் ,,,அதை தான் சில ஆண்டுகளுக்கு முன்னம் ஜெனீவா பிரான்ஸ் ,,எல்லையில் அந்நாட்டு அரசுகள் நிலத்துக்கு கீழ் அகழ்ந்து பார்த்து நிரூபித்தது .எனவே புராணங்கள் இதிகாசங்களில் உள்ள மூட கருத்துக்களை எதிர்க்கும் அதே வேளை அதில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்ய வேண்டும் .சித்தர்கள் ஞானிகள் எழுதிவைத்த குறிப்புக்களை உண்மை என்ற கோணத்தில் ஆய்வு செய்து உறுதி படுத்த வேண்டும் எனவே ஆன்மீகத்தையும் அறிவியலோடு சம்பந்த படுத்தி அந்த உண்மைகளை அகிலத்தில் அனைவருக்கும் பயன்படும் வழிவகை செய்ய வேண்டும்