சனி, 3 ஜனவரி, 2015

                              அந்த ஒருவர் .............................................!

அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்ததாகச் சொல்வர். இந்த மும்மாரி பெய்தது என்பதற்கான பழம் பாடல் ஒன்றுண்டு. அது என்ன தெரியுமா?..
வேதம் ஓதும் வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே
மூதுரை என்னும் நூலில், நெல்லுக்கு பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்வது போல, ஊரில் ஒரு நல்லவர் இருந்தாலும் போதும் அவருக்காகவே மழை பொழியும். அதன் பயன் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும், என்கிறார் அவ்வையார்.
                     அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல்
படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.
சோதனைக்குழாய் குழந்தை
உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.
தொலைக்காட்சி பார்த்தவர்
முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது.
அணுவுருவில் நதிகள்
அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.
நெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள் தெரியுமா?
இந்துக்களின் வழிபாட்டில் நெருப்புஒரு முக்கிய இடம் வகுக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி. அதுமட்டுமல்ல, நெருப்பு இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும். நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி. நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபட்டால் போதும். நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம்.
உலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா?


ஒருமுறை தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரும் வியாழ பகவானைக் கவனியாமல் ஆடிக்கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த தேவகுரு ""பூந்துறை நாட்டில் முத்தி என்ற தாசி வயிற்றில் இரட்டை குழந்தைகளாக பிறப்பீர்கள் என சபித்தார். தாங்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்தருளுமாறு குருபகவானை இருவரும் வேண்டினார்கள். சாப விமோசனம் வேண்டிய அவர்களை மன்னித்த தேவகுரு, ""தாசியின் வயிற்றில் பிறந்து 12 ஆண்டுகள் பார்வதி தேவியை வணங்கி வந்தால், ஐராவதம் ஏறிய இந்திரன் நீங்கள் வாழும் பூந்துறை நாட்டில் பொன்மாரி பெய்வான். அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்றார்.
தேவகுருவின் சாபத்தால் ரம்பை, ஊர்வசி இருவரும் அழகாலும் குணத்தாலும் சிறந்த தாசி முத்தியின் வயிற்றில் பிறந்தனர். அவர்கள் சிறுநல்லாள், பெருநல்லாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். தேவகுருவின் வாக்கின்படியே சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் ஈரோட்டில் குடி கொண்டுள்ள ஆருத்ரா கபாலீஸ்வரரையும், வருணாம்பிகையையும் மனமுருக வழிபாடு செய்தனர். அவர்களது அன்புக்கு இறங்கிய சிவன், இந்திரன் மூலம் பூந்துறை (தற்போதைய ஈரோடு) நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து ரம்பை, ஊர்வசியின் பாவம் போக்கினார். இந்த ரம்பை, ஊர்வசி தான் உலகின் முதல் இரட்டை குழந்தைகள்!..

வெள்ளி, 2 ஜனவரி, 2015

                                         இந்துமத்தின் நம்பிக்கைகள்







1. பிறந்து விட்ட எந்த உயிருக்கும் மரணம் நிச்சயமானது.
2. உடலை விட்டு நீங்கும் உயிர் (ஆத்மா) மீண்டும் மறுபிறப்பு எடுக்கும். இது அவர்கள் முற் பிறப்பிலே செய்த பாவத்தின் காரணமாகவே நிகழும். எனவே இறந்த பின்னர், எல்லாம் வல்ல இறைவனின் பொற்பாதங்களின் அருகில் இருக்காது மீண்டும் இவ்வுலகில் நாம் எல்லோரும் பிறந்திருக்கும் காரணம் நாம் முற் பிறப்பிலே செய்த பாவங்களே.
இவ்வாறு மீண்டும் பிறக்கையில் நாம் முன் பிறப்பில் செய்த பாவ, புண்ணியங்கள் பிரம்மாவினால் கணக்கில் எடுக்கப்பட்டு எமது அடுத்த பிறப்பு எவ்வாறு இருக்கும் என தீர்மானிக்கப்படுகின்றது. (பணக்காரர் அல்லது ஏழை, ஆரோக்கியமான அல்லது நோய் வாய்படுதல் , மிகவும்சமூகத்தின் உயர் அந்தஸ்து அல்லது ஒரு சிறை பறவை)
3. எனவே சிறந்த நோக்கமாக, இந்த வாழ்க்கையில் மேலும் பாவங்களை செய்து கொள்ளாமல், இப் பிறவி முடிவதற்க்கு முன்னர், கடந்த பிறப்பில் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி எம்மை மீண்டும் பிரச்சினைகள் நிறைந்த இந்த பூமியில் பிறக்க தேவை இல்லாத வகையில், இறைவனின் திருவடி நிழலில் எப்பொதும் இருக்கும் பேரின்பப் பேரருள் செய்யுமாறு கோரியே சிவபெருமானை வழிபடுகிறோம்.
இந்துகளின் நம்பிக்கைப்படி, இந்த உலகில் தோன்றும் ஒரு உயிர் தொடர்பாக மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.
அந்த உயிரானது படைக்கப்படவேண்டும் (ஒரு உயிரின் பிறப்பு).
படைக்கப்பட்ட உயிர் பிறந்த பின் அபாயங்களில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இறுதியாக வாழ்வின் முடிவில் அவ்வுயிர் அழிக்கப்பட வேண்டும். (உதாரணமாக ஒருமுதுமையான வயதில் ஒரு மனித இறப்பு).
ஒரு உயிரின் பயணம், இந்த மூன்று நிகழ்வினூடாக ஆரம்பித்து, இறுதியில் முடிவுக்கு வருகிறது.
எனவே எல்லாம் வல்ல பரம்பொருள் ஆகிய கடவுள் இந்த மூன்று முக்கியசெயல்பாடுகளை, அதாவது 'படைத்தல்', 'காத்தல்' மற்றும் 'அழித்தல்' ஆகியவற்றை செவ்வனே செய்ய மூன்று வடிவங்களை எடுத்துள்ளார்.
சிவாலயங்களில் தரிசனம் செய்து விட்டு உட்கார்ந்து வர வேண்டும் என்பது ஏன்?



நாம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்கிறோம். திரும்பி வரும் போது ஆலயத்தில் சற்று நேரம் அமர்ந்து விட்டு வருகிறோம். ஏன்? சிவாலயங்களில் மட்டுமே அவ்வாறு அமர்ந்து விட்டுவர வேண்டும் என்ற காரணம் தெரியுமா. நம்மைப் பின்தொடர்ந்து சிவனுடைய பூதகணங்கள் நம் வீட்டிற்கு வந்து விடக்கூடாது. மேலும் சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதனால் சிவன் கோயில் தூசு கூட நம்மேல் ஒட்டக் கூடாது என்பதும் ஒரு கருத்து. அதுபோல் விஷ்ணு கோயிலில்களில் தரிசனம் செய்த பிறகு அமர்ந்து விட்டு வரக் கூடாது. ஏனென்றால் அப்போது தான் லட்சுமி நம்முடன் வீட்டிற்கு வருவாள். அதிர்ஷ்டம் பொங்கும் என்பது ஒரு கருத்து.
                  ராமனின் செருப்புக்கு மரியாதை தரப்பட்டது ஏன்?



பாற்கடலில் பரந்தாமனான பெருமாள் பள்ளிகொண்டிருந்தார். அவரது தலைக்கு ஆதிசேஷ பாம்பு குடைபிடித்திருந்தது. காலில் பாதரட்சை அணிந்திருந்தார். பெருமாள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இருவரும் பேசிக்கொண்டனர். இப்போது பெருமாள் தூங்கிக் கொண்டுதானே இருக்கிறார். நாம் இருவரும் வெளியே போய் சற்று வேடிக்கை பார்த்துவிட்டு, தேவலோகத்தில் ரம்பையர்கள் ஆடும் நடனத்தை ரசித்து வருவோமே என்றது பாம்பு.பாதரட்சை மறுத்துவிட்டது. பெருமாளின் பாதத்திற்கு சேவை செய்வதைவிட சிறந்த இன்பம் வேறு ஏதும் இல்லை. எனவே நான் வரவில்லை. நீ வேண்டுமானால் போய் வா என சொல்லிவிட்டது. பரந்தாமன் இவ்வுலகில் நடக்கும் அனைத்தையும் கவனிப்பவர்.
ஒவ்வொரு உயிரின் நடவடிக்கையையும் அவர் தனது பதிவேட்டில் பதிந்துவிடுவார். அப்படியிருக்க தன் அருகிலேயே இருக்கும் பாம்பையும், பாதரட்சையையும் அவர் கவனிக்காமல் இருப்பாரா என்ன! அவர் தூங்குவது போலவே நடித்துக்கொண்டிருந்தார். பாம்பு அங்கிருந்து வேடிக்கை பார்க்க புறப்பட்டு விட்டது. பெருமாள் அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை. ராமாவதார காலம் வந்தது. தனது செருப்பை கழற்றி பரதனுக்கு கொடுத்தார். அந்த திருவடியை வைத்து பரதன்ஆட்சி நடத்தினான். செருப்பை பாதுகாக்க ஒரு குடையை அமைத்தார். அந்த குடைதான் முற்பிறவியில் ஆதிசேஷனாக இருந்த பாம்பு. இப்போது செருப்புக்கு பாம்பு குடைபிடிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. இதைத்தான் பாதுகா பட்டாபிஷேகம் என்பார்கள். இறைவனுக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையிலும் கடமை என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டுமே தவிர, அதைப் புறம் தள்ளக்கூடாது என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
சபரிமலை பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.
18 படி தெய்வங்கள்
ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.
1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது
பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?
முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.
இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.
மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.
ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.
எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.
ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உ<ணர்வது ஒன்பதாம் படி.
பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.
பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.
பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.
பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
ஆடு பலியிடும் வழக்கம் எவ்வாறு வந்தது




அஜம் என்ற சமஸ்கிருதச் சொல்லே, கோயில்களில் ஆடு பலியிடும் வழக்கத்திற்கு காரணமாக அமைந்து விட்டது. அஜம் என்றால் ஆடு என்ற பொருள் இருக்கிறது. ஒரு காலத்தில் அஸ்வமேதயாகம் செய்த போது குதிரையை பலியிட்டார்கள். அஸ்வம் என்றால் குதிரை. எரியும் யாகநெருப்பில் குதிரையைத் தள்ளி விட்டு விடுவார்களாம். இதேபோல் தான் அஜம் என்ற வார்த்தைக்கு உரிய பொருளையும் பயன்படுத்தி ஆடு பலியிடும் வழக்கம் வந்தது. அஜம் என்ற சொல்லுக்கு முளைக்காத பழைய நெல் என்ற பொருளும் உண்டு. இதை யாககுண்டத்தில் கொட்டுவது வழக்கம். இதையே அஜமுகி (கந்தபுராணத்தில் வரும் சூரபத்மனின் தங்கை, ஆடு முகம் கொண்டவள்) போன்ற வார்த்தைக் குழப்பங்களால் ஆடாக மாற்றி, ஆடு பலியிடும் வழக்கத்திற்கு மாறி விட்டனர் என்று சில மகான்கள் சொல்கின்றனர்
மயிலுக்கு தோகையில் கண் போன்ற அமைப்பு வந்தது எப்படி?


மயில் தோகை விரித்தாடும் அழகைப் பார்க்கவே பரவசமாக இருக்கும். நம் வீட்டிற்கு முன் நின்று கரையும் காகங்களுக்கு உணவளித்தால் நம் முன்னோர்களுக்கு அன்னமளிப்பதற்குச் சமம். புராணங்களில் அன்னப்பறவையின் அறிவு மிகவும் போற்றப்படுகின்றது. ஓணான், சாதாரணமாகத் தங்க நிறத்தில் தோன்றும். ஸ்ரீவால்மீகி ராமாயணம் உத்தரகாண்டத்தில் மேற்கூறிய இப்பிராணிகளுக்கு எவ்வாறு தனித்தன்மை வாய்த்தது என்பதற்கான விளக்கம் உள்ளது.
மருத்தன் என்ற அரசர் உசிரபீஜம் என்ற இடத்தில் ஒரு யாகம் நடத்தினார். தேவகுரு பிருகஸ்பதியின் சகோதரர் சம்வர்த்தர் யாகத்தை நடத்த உதவினார். அப்போது ராவணன் அங்கே வந்தான். அவனது அபரிமிதமான பலத்தாலும், பிரம்மாவினால் வழங்கப்பட்ட வரங்களாலும் அவனைக் கண்டு பயந்த தேவர்கள் தங்கள் சொந்த உருவங்களை மறைத்துக் கொண்டு வேறு உருவங்களை எடுத்தனர். இந்திரன் மயில் ஆனான்; யமன் காகம் ஆனான்; குபேரன் ஓணான் ஆனான்; வருணன் அன்னம் ஆனான். அப்போது ராவணன் ஓர் அசுத்தமான நாய் போல யாகம் நடந்த பஞ்சவடிக்குள் நுழைந்தான். ராவண: ப்ராவிசத் யக்ஞம் ஸாரமேய இவா சுசி: என்றார் வால்மீகி. மருத்தனிடம் ராவணன் சென்று அவரைத் தன்னுடன் போரிட அழைத்தான். மருத்தன் அவனை யார் என்று கேட்டார். ராவணன் திமிராக, உன் அறியாமையைக் கண்டு வியப்பாக உள்ளது. அரசே, நான் குபேரனின் சகோதரன். அவனை வென்று நான் இந்தப் புஷ்பக விமானத்தைக் கைப்பற்றினேன் என்றான். அரசனோ, ஓ! மூத்த சகோதரனையே போரில் வென்றவனா நீ? இதுவரை நான் உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஏ கொடுமதியானே! எனது அம்புகளால் உன்னை யமனிடம் அனுப்புகிறேன், பார் என்றார். மிகுந்த கோபத்துடன் வில்லேந்தி ராவணனை எதிர்க்கக் கிளம்பினார் மருத்தன். உடனே சம்வர்த்தர் சொன்னார்: அரசே! நான் கூறுவதைக் கேள். மகேஸ்வரனைக் குறித்துச் செய்யப்படும் இந்த யாகத்தை அரைகுறையாக விட்டால் உனது வம்சமே அழிந்துவிடும். யாக தீட்சை எடுத்துக் கொண்டவர் போர் புரிவது தகாது. கோபம் கொள்வதும் தகாது. போரில் வெற்றியடைவதும் நிச்சயமல்ல. மேலும் ராவணனைப் போரில் வெல்வது மிகவும் சிரமமானது. மருத்தன் அந்த அறிவுரையை ஏற்று, யாகம் செய்வதில் முனைந்தார். உடனே ராவணனின் மந்திரி சுகன், ராவணன் வென்றான் என்று கொக்கரிக்க, ராவணனும் அங்கிருந்து அகன்றான்.
அவன் சென்ற பிறகு இந்திராதி தேவர்கள் தங்கள் சுய உருவங்களை அடைந்தார்கள். அப்போது இந்திரன் மயிலிடம், உனக்குப் பாம்புகளால் பயம் ஏற்படாது. உன் நீல நிறத்தோகையில் என் ஆயிரம் கண்கள் போன்றதொரு தோற்றம் ஏற்படும். மேகமூட்டத்தின்போது நீ தோகையை விரித்து அழகாக ஆடுவாய் என வரம் தந்தார். வரத்தைப் பெற்ற மயில் கூட்டங்கள் மகிழ்ந்தன. அங்கிருந்த காகத்திடம் யமன், காகமே! நீ எனக்கு மிகவும் திருப்தி தந்துள்ளாய். பிற உயிர்களைப் பாதிக்கும் நோய்கள் உன்னை வருத்தாது. உன்னை மக்களும் கொல்லமாட்டார்கள். நீ மாந்தர்களால் அளிக்கப்படும் உணவைச் சாப்பிட்டால், அதன் விளைவாக பித்ரு லோகத்திலுள்ள பித்ருக்கள் பசிப்பிணி நீங்குவார்கள் என்றார். அடுத்து, வருண பகவான் அன்னத்திடம், அன்னமே! இனி பூரண சந்திரனை ஒத்ததாக உனது மேனி விளங்கும். உன்னைக் காணும் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும். நல்ல வெண்மையான நுரையைப் போல தனித்தன்மையுடன் நீ விளங்குவாய். எனது சரீரமான நீருடன் நீ இணையும் போது உன் மகிழ்ச்சி ஈடு இணையற்றதாகும் என வரமளித்தார். (இந்த வரம் கிடைப்பதற்கு முன்பு அன்னப்பட்சிகள் வெள்ளை நிறமாக இல்லை. அவற்றின் இறக்கைகளின் நுனி கருமையாகவும், அவற்றின் மார்புப் புறம் கருமை கலந்த பழுப்பு நிறமாகவும் இருந்ததாம்.) ஒரு பாறையின் மேலிருந்த ஓணானிடம் குபேரன், ஓணானே, இனி உன் உனது கருமை நிறம் மாறிப் பொன் நிறமாகவும் மாறும் என்றார். இவ்வாறு தேவர்கள் வரம் அருளியதால் இப்பிராணிகளுக்கு தனித்தன்மை வாய்த்ததாக புராணங்கள் கூறுகின்றன.
புது மணப்பெண்ணை தானியத்தை உதைத்து வீட்டிற்குள் வரவழைப்பது ஏன்?





வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணை மகாலட்சுமியாகப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் மருமகள் என்று எதற்கு சொன்னார்கள் என்றால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்கிறாள், இன்று முதல் மகாலட்சுமி குடிபுகுகிறாள் என்று சொல்லக்கூடிய வழக்கம் இருந்தது. இன்றைக்கும் சில ஊர்களில் திருமணம் முடிந்து நேராக மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு விளக்கேற்றச் சொல்வார்கள். புதுப்பெண்ணிற்கு ஒரு காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்து அதனை ஏற்றச் சொல்வார்கள். அவர்கள் நுழையும் போது லட்சுமியோடு உள்ளே வருகிறார்கள் என்று அர்த்தம். தானியங்கள் தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகுதான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச் சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு வருகிறாள். அந்தப் பெண் காலடி வைக்கும் நேரத்தில் இருந்து லட்சுமி கடாட்சம் சூழ்ந்து வருவது போன்று. அதனால்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது என்பது ஐதீகம். ஏற்கனவே அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண மேடையில் அவர்கள் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகளில் ஒரு பெண் புனித நிலையை அடைகிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய மனநிலை ஒரு தெய்வ நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக கருத்தில் கொண்டு தானியத்தை உதைத்து வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை வரவழைப்பதாக ஐதீகம்.
மகாபாரத போர் தெரியும்!.. அதில் அனைத்து வீரர்களுக்கும் உணவளித்தது தமிழகம் என்பது தெரியுமா?


மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கி உதவியவன் சேரமான் உதியஞ் சேரலாதன் என்ற சேரமாமன்னன். அவன் இவ்வாறு உணவு வழங்கியதால், பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்றே சரித்திரத்தில் அவனது திருப்பெயர் விளங்குகிறது. புறநானூறு என்ற சங்ககால நூலின் இரண்டாவது பாடலில் அந்த மாமன்னனைப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடினார்.
பாண்டவ-கவுரவ யுத்தத்தின் போது சேரமாமன்னன் உதியஞ் சேரலாதன் இருபடைகளுக்கும் சோறு வழங்கிய செய்தியை புலவர் வியந்து குறிப்பிடுகிறார். புறநானூற்றுப் புலவர் தெரிவிக்கும் இந்தச் செய்தியை சிலப்பதிகாரம் உறுதி செய்கிறது. மதுரை மாநகரம் கண்ணகியின் கோபத்தால் அக்கினிக்கு இரையான பிறகும் கண்ணகியின் கோபம் தீரவில்லை. அவள் வருத்தத்துடன் அமர்ந்திருந்தபோது, பாண்டிய மன்னனின் குலதெய்வமான மதுராபதி என்ற குலதெய்வம் கண்ணகியின் பின்பக்கமாக வந்து நின்றது. நீ யார்? என்று கண்ணகி கேட்டாள். அவளுக்குத் தன்னைப் பற்றி தெரிவித்த மதுராபதி தெய்வம் மேலும் சில செய்திகளைக் கூறியது. பாண்டியன், கோவலன் இருவரும் தவறு செய்யாதவர்கள். ஆனால், இருவருக்கும் முன் செய்த தீவினையின் விளைவாக ஏற்பட்ட பழி ஒன்று உண்டு என்று மதுராபதி தெய்வம் கூறியது. பிறகு
மன்னர்கள் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பதைச் சில உதாரணங்களுடன் அந்த தெய்வம் விவரித்தது. தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு நீதி தவறாத நேர்மையாளன் என்று புகழ்பெற்ற பொற்கைப் பாண்டியன், ஒரு புறாவுக்காக தான் துலாக்கோல் ஏறிய சோழ மன்னன் சிபி, கன்றை இழந்த பசுவுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி நீதி செய்த மற்றொரு சோழமன்னனாகிய மனு, பாரதப்பெரும் போரில் இரு தரப்புப் படைகளுக்கும் சோறு அளித்த சேரமன்னன் உதியஞ் சேரலாதன் என்று ஒரு பட்டியலையே மதுராபதி தெய்வம் எடுத்து உரைக்கின்றது.
சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், கட்டுரைக் காதை பகுதியில் பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை என்ற அடிகளில் சேரமன்னன் சோறு வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. இதே செய்தியை, வஞ்சிக்காண்டம், வாழ்த்துக் காதை பகுதியில் இளங்கோ அடிகள் மீண்டும் குறிப்பிடுகிறார். தோழிப் பெண்கள் மன்னர்களைப் போற்றி புகழ்ந்து ஆடுகிறார்கள்; பாடுகிறார்கள். இதிலும் மகாபாரத யுத்தத்தில் இரு தரப்பு படைகளுக்கும் சேரமாமன்னன் பெருஞ்சோறு அளித்த செய்தி பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவின் வடக்கே ஒரு பகுதியில் ஒரு பெரும்போர் நடக்கிறது. அதற்கு தெற்கே தமிழ்நாட்டிலிருந்து சோறு வழங்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி, இந்தியப் பண்பாட்டின் பழமையை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறது.