ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தேக்குமரம் , டேட்டா எண்ட்ரி, மல்டி லெவல் மார்க்கெட்டிட்ங், ஈமுகோழி



          
பெத்த அப்பன்,ஆத்தாவுக்கு குடிக்க கஞ்சி ஊத்த மாட்டாய்ங்க! கூடபிறந்தவங்கள ஏமாத்துவான்,
 அக்கம் பக்கம் அவசரம்னு யாரு உதவி கேட்டாலும் மூஞ்சிய திருப்பி வச்சிக்கிடுவாய்ங்க! எச்சி கையில காக்காய் ஓட்டமாட்டானுக!


இவிங்க பணத்தை எங்கதான் வச்சிருப்பய்ங்களோ தெரியாது, ஆனா எவனாவது நாமகட்டி எடுத்துகிட்டு வந்தா,கூட்டம் கூட்டமா கெளம்பிபோய் நெத்திய காமிக்க தயார க்யூல போய் நின்னுடுவாய்ங்க நாம்ம ஆளுங்க....!


இப்பவும் அப்படித்தான் ஈமுகோழிக்காரய்ங்க கிட்ட பெருசா நாமத்தை வாங்கிகிட்டு வந்து நிக்கிறாய்ங்க....இவிங்களுக்கு போட்ட பணத்தை மீட்டு தர்றதுக்கு, போலீசு இருக்கிற வேலையெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு, ஓடிப்போனவணை தேடிக்கிட்டு இருக்கனும்.அவன் சொத்த பந்தோபஸ்து செய்யனும்.அப்புறம் முதலமைச்சர் வேற,இருக்கற வேலைக்கிடையில "இந்த கோழியை அரசே பராமரிக்கனும்"-னு அறிக்கை விடனும்.....எல்லாம் தமிழ்நாட்டோட தலவிதி...!


இவிங்க நெத்தியில் வாங்கின நாமத்துக்கு,இன்னிக்கு வரைக்கும் கணக்கே இல்லை.....1990 ல் அனுபவ் டீக் ப்ளாண்டேஷன் - னு ஒரு அனுபவபட்ட புத்திசாலி ஆரம்பிச்சான்,தேக்கு மரம் வளர்த்து தர்ரோம்.ரொம்ப சிம்பிள்,நீங்க பணத்தை முதலீடு செஞ்சா போதும்,வேற எந்த வேலையும் நீங்க பார்க்க வேணாம்,நாங்களே மரத்தை பராமரிச்சு,வளர்த்து,அதை வித்து உங்களுக்கு ஒன்னுக்கு பத்தா இல்லை நூறா திருப்பிதர்ரோம்-னு...அறிவிச்சதுதான் பாக்கி...எத்தனை பயபுல்லைக இருக்கிற பணத்தையும்,அண்டா குண்டா எல்லாம் அடகு வெச்சி கொண்டு போய் டெபாசிட் பண்னினாய்ங்க... அதுமட்டுமில்லாம பேசி பேசியே பக்கத்து வீட்டுகாரன்,உறவுக்காரன், நன்பர்கள்-னு எல்லாரையும் டெபாசிட் பண்னவெச்சாய்ங்க....அப்படி டெபாசிட் பண்ணாதவனையெல்லாம் ஏதோ "டெபாசிட்டை பறிகொடுத்த" சுயேட்சை வேட்பாளரை பார்க்கறது மாதிரி பரிதாபமா பார்த்தாய்ங்க இந்த கும்பல்..


அப்புறம் ஒரு நாள் சாவகாசமா மக்கா எல்லாத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டான் அந்த தேக்குமர புண்ணியவான். லபோ,திபோனு அடிச்சுகிட்டு போய் அந்த நிறுவண வாசலில் புள்ளை குட்டியோட ஒக்காந்து ஒப்பாறி வெச்சாய்ங்க நம்ம ஆளுங்க.அப்புறம் அரசு தலையிட்டு கொஞ்சம் மீட்டு கொடுத்ததா ஒரு ஞாபகம்.....

அப்புறம் கொஞ்ச நாள்தான் சும்மா இருந்தாய்ங்க...ஈஸ்வரி பைனான்ஸ்,சிட்பண்ட்ஸ்-னு கிளம்பிவந்தாய்ங்க ஒரு குரூப்பு..முதலீட்டுக்கு 36% வட்டி,டெபாசிட் செய்யும்போதே அஞ்சு,பத்து பெர்சண்ட் போனஸ்,அப்புறம் டெபாசிட்டுக்கு ஏத்தபடி வெள்ளி குத்துவிளக்குல இருந்து அதை ஏத்திவைக்க தேவைபட்டா ஒரு பொன்.............ங்கிற ரேஞ்சுக்கு இலவசமா கொடுக்கிறதா அறிவிச்சாய்ங்க.....


யோசிக்கவே இல்லையே நாம்ம ஆளுங்க....! டக்குனு போய் வரிசைகட்டி நின்னு லட்சரூபாய டெபாசிட் பண்ணிட்டு, ரெண்டு குத்துவிளக்கு, எவர்சில்வர்டம்ளர்,அப்புறம் தவறி கீழபோட்டாகூட பவுன்ஸ் ஆகிற நாலந்து செக்-னு அமர்களமா வாங்கிட்டு திரும்பி வந்துட்டாய்ங்க..ஊரு ஊருக்கு கிளை ஆரம்பிச்சு மூட்டை மூட்டைய பணத்தை வாரி கட்டினானுக பைணான்ஸ்காரணுக...!

அப்புறமா, ஒரு நல்ல நாள் பார்த்து பைணான்ஸ் ஓனரு ஓடிப்போய்ட்டான். திரும்பவும் அந்த ஆபீஸ் வாசல்ல அதே காட்சி,அதே அழுகை..போலீசு வந்து பந்தோபஸ்து போட்டு இருந்த சொத்தை மீட்டு கோர்ட்டுக்கு கொண்டுபோய்........ இப்படியே ஒரு ரவுண்டு வந்தாய்ங்க........

அப்புறகும் கொஞ்ச நாள் அமைதியா இருந்தவிங்க....திடீர்னு வந்தாய்ங்க.....மல்டி லெவல் மார்க்கெட்டிட்ங்-னு...நீங்க ஒருதடவை முதலீடு செஞ்சா போதும்.அதோட ஒரு நாலுபேருக்கு இதை அறிமுகம் செய்ங்க அது போதும்..உங்களுக்கு ரைட்லெக்ல 2 பேரு,லெப்ட் லெக்ல 2பேரு,அப்புறம் அவங்களோட ரைட்,லெப்ட்- பத்தே டவுன்ல உங்கள்கிட்ட பத்து லட்சம்-னு ப்ரசண்டேஷன்ல அவிங்க பின்னி பெடலெடுக்கறதை பார்த்த நம்ம ஆளு,பணத்தையும் போட்டுட்டு அவங்கபிண்ணாடி நாயா அலைஞ்ச கதை தனி......ஒரு கட்டத்துல ஒன்னும் தேறாதுனு தெரிஞ்சுகிட்டு அப்புறம் தேள் கொட்டின திருடானட்ட வெளியே சொல்லாம வெம்பிபோய்ட்டாய்ங்க,,,இது போலீஸ்ல பெரிய கேஸ் ஆகலை..ஆனா இதுல நெறைய பேரு நெத்தியில் நாமம் வாங்கிட்டாய்ங்கணு கவர்மெண்டே இந்த ப்ளானை தடைபன்னிருச்சு,,,



சும்மா இருப்பாய்ங்களா,,,,நல்லா ரூம் போட்டு ஓசிச்சு,அட்டகாசமா வந்தாய்ங்க.....காந்தபடுக்கை....இதுல படுத்தீங்கனா,மக்கா ஒரு நோய் நொடி வராது,அலுப்பு இருக்காது....நூறு வயசுவரைக்கும் ஜம்முனு இருக்கலாம்..இது எல்லாத்துக்கும் மேல.....காந்தபடுக்கை அந்த மேட்டர்ல உங்களை பெரிய மன்மதராசாவா ஆக்கிடும்-னு கதைவிட்டாய்ங்க.நம்மாளுங்க மன்மதராசா மேட்டர்ல கொஞ்சம் மனசை விட்டுட்டாய்ங்க...அப்படியே கெளம்பிபோய் ஆளுக்கொரு காந்த படுக்கைய புக் பண்னிட்டு, பிசினஸ் பார்ட்னரா ஜாயின் பன்னி,இவிய்ங்க கெட்டதுமில்லாம,இவிங்கல சேர்ந்த நாலுபேரை கெடுத்து அதுக்கு கமிஷனும் வாங்கிகிட்டாய்ங்க......

ஒரு மவராசன் இதுல படுத்து எனக்கு எதுவுமே நடக்கல,அந்த மன்மதராசா விஷயத்தில் கூட உள்ளதும் போச்சுடா லொள்ளகண்ணா-னு ஆகிடுச்சுனு திடீர்னு காந்தபடுக்கை கம்பெனிகாரன் மேல புகார் கொடுக்க....அப்புறம் என்ன வழக்கம்போலதான்....

அப்புறம் கொஞ்சநாள் ஓடிச்சு...அடுத்த படத்தை ரிலீஸ் பன்ணினாய்ங்க.....இது கொஞ்சம் மாடர்ன்.கம்ப்யூட்டர் காலமில்லையா.அதனால சப்ஜெக்ட்ட மாத்திட்டாய்ங்க.....டேட்டா எண்ட்ரி ஜாப்....

ஒரு லட்சம் கட்டினா ஒரு கம்ப்யூட்டரும்,ஒரு C.D யும் தருவோம்,அதுல இருக்கிற டேட்டாவை அப்படியே டைப் பண்னுங்க அதை நாங்க எடுத்துகிட்டு எவ்வளவு குற்றமோ அதற்கு தகுந்தாற்போல கொஞ்சம் குறைச்சுகிட்டு பணம் தருவோம்.வீட்டிலிருந்து கிட்டு தினமும் ஒரு ரெண்டு மணி நேரம் ஒர்க் பண்னினா போதும், மாசம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்-னு ஒரு பிட்டை போட்டானுக.....அவ்ளோதான் அடுத்த நாமக்கட்டி ரெடி..வாங்க போயி வாங்கிட்டு வந்திடலாம்னு..நம்மளுங்க ஆட்டோவோட போயி ஒரு லட்சரூபா கட்டிட்டு சில ஆயிரம் கூட போகாத கம்ப்யூட்டரையும்,பத்துரூபா C.D யையும் வாங்கிட்டு வீட்டில வந்து டேட்டா எண்ட்ரி ஆரம்பிச்சாய்ங்க.......


போதுமான அளவு பணம் சேர்ந்திட்டதா "டேட்டா" கிடைச்சவுடன்,டேட்டா கம்பெனிகாரன் டாட்டா காமிச்சுட்டான்.அவன் போட்டா கூட இவிய்ங்ககிட்ட கிடையாது....

அப்புறம் என்ன செய்ய.....வடிவேலு மாதிரி வடை போச்சே-னு பொலம்பிட்டு...இருந்த கம்ப்யூட்டருக்கு "நெட்" கனெக்க்ஷன் கொடுத்து "பிட்"படம் பார்த்துகிட்டு இருந்தாய்ங்க....

இதுவரைக்கும் நீங்க பார்த்தது ட்ரெயிலர்தான்.இப்ப பாருங்கடா மெயின் பிக்சரைனு சொல்லி களத்தில் குதிச்சாய்ங்க ஒரு கம்பெனி. பாஸி Forex Trading -னு காலத்துக்கு ஏத்தபடி DTS சவுண்ட்,Digital Effect -னு படம் கொஞ்சம் சூடுபிடிச்சது. லட்ச ரூபாய்க்கு மாசம் 15 ஆயிரம் வருமாணம்-னு போட்ட போடுல குடும்பம் குடும்பமா போய் பணத்தை டெபாசிட் பண்ணிட்டு ரெண்டு மூனு மாசம் செக் வாங்கி சந்தோஷமா இருந்தாய்ங்க...புதுசு புதுசா ஆபீஸ் ஓப்பன் பண்ணினாய்ங்க...இதுல குவிஞ்ச தொகைய பார்த்து நடத்துனவனுகளுக்கே பயம் வந்துடுச்சு....அநியாயத்துக்கு இப்படி நல்லவிங்களாடா நீங்க-னு நம்மாளுங்க அப்பாவிதனத்துனால குவிஞ்ச தொகைய பார்த்து மலைச்சுபோய் ஓடிப்போய்ட்டானுக..அப்புறம் போலீச் தலையிட்டு.....கதை க்ளைமேக்ஸ் என்னைக்குனு தெரியல...டெபாசிட் பன்னி ஏமாந்த நம்மாளுங்க டி.வி. அழுதுகிட்டே சொன்னாய்ங்க "கவர்மெண்ட் நடவடிக்கை எடுத்து,எங்க பணத்தை மீட்டு தரனும்".......என்னமோ ரிசர்வ் பேங்க்ல டெபாசிட் பண்னி திருப்பி கெடைக்காதது மாதிரி பேட்டி கொடுத்தாய்ங்க.....நீங்கள்லாம் கவர்மெண்டை கேட்டா பாரெக்ஸ் கம்பெனியில பணத்தை போட்டீங்க......இப்படி அந்நியன் அம்பி மாதிரி அநியாயத்துக்கு நாமம் வாங்கின நம்மாளுங்க எப்படி அதுக்குள்ள ரெடியானாய்ங்கனு தெரியலை...

இப்போ ஈமுகோழிகாரய்ங்ககிட்ட நாமம் வாங்கி டெய்லி டெய்லி போலிசாரோட உயிரை வாங்கிகிட்டு இருக்காங்க....பாவம் போலிசும் "எத்தனைதடவை சொண்ணாலும் திருந்த மாட்டீங்களானு...நொந்து போய் தேவையான நடவடிக்கைகளை எடுத்துகிட்டு இருக்காங்க...

ஆனா மத்த மகராசனுகல்ளாம் பரவாயில்லை...காசோடதான் ஓடிபோனாய்ங்க...ஆன இவிய்ங்க கோழிய விட்டுட்டு ஓடிப்போய்ட்டாய்ங்க.......7500 கோழிகள் வரை தினமும் தீவணமிட்டு பராமரிக்க வேண்டிய பொறுப்பு இப்போ அரசு தலையில் விழுந்திருக்கு...!அரசுக்கும் போலீசுக்கும் வேற எவ்வளவோ வேலை இருக்கும்போது இது தேவையா.....இதுக்கெல்லாம் நாயகர்கள் நாம்ம நாமம்வாங்கி திலகங்கள்தான்..

எத்தனை டி.வி நியூஸ் பார்த்தாலும் சரி,பேப்பர் படிச்சாலும் சரி,இவிய்ங்க திருந்தவே மாட்டாய்ங்க.....

புதுசு புதுசா திட்டம்போட்டு ஏமாத்த ஒரு கும்பல் கிளம்பி வருவாய்ங்க...! இவிங்களும் கிளம்பி போய் ஏமாந்துகிட்டேதான் இருப்பாய்ங்க...! இவிய்ங்க வெளையாடற விளையாட்டுக்கு கவர்மெண்டும்,போலிசும் இம்சைபடனும்.....



இதுக்கெல்லாம் ஒரே ஒரு காரணம்தான்....அதிக ஆசை.....பேராசை.... சொகுசா சம்பாதிக்கனும், அறிவ யூஸ் பண்ணாம,உடம்பை வளைக்காம,சொலையா பணம் பார்க்கனும்ங்கிற சோம்பேறி தனம்.இதுல ஏமாந்தவிய்ங்க முக்காவாசி பயக படிச்ச அறிவாளி கூட்டம்தான்.....இருக்கிற பணத்தை வச்சு ஒரு பெட்டிகடை ஆரம்பிச்சாகூட அவனுக சொல்றதை காட்டிலும் அதிகமா சம்பாதிக்க முடியும்..ஆனா அதுக்கு துப்பில்லாம,எவன் கையிலோ பணத்தை கொடுத்துட்டு,எல்லா மாசமும் கூரைய பிய்ச்சுகிட்டு பணம் கொட்டும்னு பகல் கனவு காணற கூட்டம்தான் இந்த "பட்டைநாமம் வாங்கி பரந்தாமன்கள்"....


ஏமாற்று திட்டத்தோடு கடை விரிப்பவர்களை ஆரம்பத்திலேயே கண்டு களை எடுப்பது அரசின் கடமை.ஆனால் அதை அத்துனை சுலபத்தில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது என்பது அரசினால் இயலுமா என தெரியவில்லை...

ஆனால் இந்த பேராசைபிடித்த கோஷ்டிகளின் பேராசையை உபயோகபடுத்தும் எந்த நிறுவனத்தையும்,திட்டத்தையும் பொதுமக்களால் சுலபமாக அடையாளம் கானமுடியும்.அவற்றை தவிர்க்கவும் முடியும்.ஏமாற்று பேர்வழிகளிடம் இருந்து தப்பிக ஒரே ஒரு விஷய்ம் போதும்.தங்களின் முதலீட்டுக்க சட்டபூர்வமான வழியில்,பாதுகாப்பான வருவாய்,அது எவ்வளவு குறைவாய் இருந்தாலும் சரி,அதுவே போதும் என்கிற தீர்க்கமான சிந்தனை வேண்டும்.

நமக்கு இறைவன் கொடுத்த உடலும் அறிவுமே மிகபெரிய சொத்து. அதனை கொண்டு நம் ஆசைகளை நிறைவேற்றிகொள்ளும் வலிமை இருக்கிறது என்று உணர்ந்தாலே பேராசை மழுங்கிவிடும்.
    

                                                    பேராசை பெருநஷ்டம்